திருப்பத்தூர்: நீர்த்தேக்கத்தில் குளிக்கச்சென்ற வாலிபர் சடலமாக மீட்பு

நீரில் மூழ்கி மாயமான இளைஞரின் உடல் கரை ஒதுங்கியது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரி மலைக்கு
சென்னையை சேர்ந்த 8 இளைஞர்கள் கடந்த சனிக்கிழமை சுற்றுலா வந்துள்ளனர். சுற்றுலா பயணத்தை முடித்துக் கொண்டு அருகில் இருக்கக்கூடிய ஆண்டியப்பனூர் ஓடை நீர்தேக்கத்திற்கு சென்று உள்ளனர்.
அங்கே நண்பர்கள் 8 பேரும் நீரில் விளையாடி கொண்டு இருந்த போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞரின் உதவியாளராக பணியாற்றி வந்த சென்னை அமிஞ்சிக்கரை பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் விஜயகுமார் (வயது 22), நீரில் மூழ்கி மாயமானார்.
சம்பவம் குறித்து உடன் வந்த நண்பர்கள் குரிசிலாப்பட்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் குரிசிலாப்பட்டு காவல்துறையினர் திருப்பத்தூர் மற்றும் ஆலங்காயம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் கடந்த இரண்டு நாட்களாக உடலை தேடி வந்தனர். இருப்பினும் மாயமான இளைஞர் விஜயகுமார் உடல் கிடைக்காத நிலையில் மூன்றாவது நாளான இன்று சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்ட ஸ்கோப் நீரில் உள்ளே சென்று தேடும் டீம் வரவழைக்கப்பட்டு உடலை தேடும் பணி தீவிரப்படுத்தினர்.
தீயணைப்புத் துறையினர் தேடண்டு வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருக்கிற போது விஜயகுமார் உடல் தானாகவே நீரிலிருந்து வெளிய வந்து கரை ஒதுங்கியது. இதனால் உடலை மீட்டு குரிசிலாப்பட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் பிரேதத்தை பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து குரிசிலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.