பெண்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்கத் தவறிய செயல்திறன் அற்ற ஆட்சி இது - என். ஆனந்த் விமர்சனம்

கோப்புப்படம்
பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை த.வெ.க. வரவேற்கிறது என்று என். ஆனந்த் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 வருடங்களுக்குத் தண்டனைக் குறைப்போ மற்றும் வேறு எந்தச் சலுகையுமோ அற்ற ஆயுள் தண்டனையும் ரூ.90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டிருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது.
இந்த வழக்கில் குற்றவாளியான ஞானசேகரனை ஒரு தியாகி போல் தி.மு.க.வினர் சித்திரித்து, அவரைக் காப்பாற்ற முயன்றனர். சட்டப் பேரவையிலேயே தமிழ்நாட்டின் முதல்-அமைச்சரே குற்றவாளியின் பெயரைச் சொல்லி அவர் மீதான களங்கத்தைப் போக்க முயன்றார். எதிர்க்கட்சிகள் அதை மக்கள் மன்றத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டி, நீதிக்கு வழிவகுத்தனர். தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் போராட்டங்களையும் மீறி, தமிழக மக்களைச் சுலபமாக ஏமாற்றிவிடலாம் என்கிற இவர்களின் எண்ணம் நிறைவேறாமல் போனது.
சட்டம் ஒழுங்கை முறையாகக் காப்பாற்ற வகையற்ற, பெண்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்கத் தவறிய, செயல்திறன் அற்ற ஓர் அவல ஆட்சி இது. இத்தகையக் கொடூரக் குற்றங்கள் தொடர்ந்து இழைக்கப்படுவதை இனியாவது விழித்துக்கொண்டு, தடுக்கவில்லை எனில் மக்கள் மன்றத்தில் இந்த கபட நாடகத் தி.மு.க. அரசு தண்டிக்கப்படுவது உறுதி என்பதை தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் ஒப்புதலோடுத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






