‘சமூக நீதி பற்றி பேசுபவர்கள் கூட்டணிக்குள்ளேயே சமூக நீதி இல்லை’ - நயினார் நாகேந்திரன் விமர்சனம்


‘சமூக நீதி பற்றி பேசுபவர்கள் கூட்டணிக்குள்ளேயே சமூக நீதி இல்லை’ - நயினார் நாகேந்திரன் விமர்சனம்
x

கூட்டணிக்குள்ளேயே சமூக நீதி இல்லை என்றால், தமிழ்நாட்டில் எப்படி சமூக நீதி தர முடியும்? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

“அழகர் கோவிலில் திருமணத்தில் பங்கேற்று விட்டு பெரம்பலூரில் நடைபெற உள்ள இரண்டாவது கட்ட சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதற்காக செல்கிறேன். அதைத் தொடர்ந்து நாளை காலை தஞ்சாவூரில் சேதம் அடைந்த பயிர்களை பார்வையிட உள்ளேன்.

மக்கள் ஆதரவு எல்லா இடங்களிலும் உள்ளது. பொதுக்கூட்டத்திற்கு சென்றால் அந்த இடத்தில் மட்டும்தான் ஆதரவு இருக்கும். கார்களில் நாங்கள் செல்லும்போது பொதுமக்கள் இரண்டு பக்கங்களும் நின்று வரவேற்பு கொடுக்கிறார்கள். அது ஆட்சி மாற்றத்திற்கான வரவேற்பு.

நெல் கொள்முதல் குறித்து எந்த விவசாயம் புகார் செய்யவில்லை என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். யார் மீது புகார் கொடுக்க முடியும்? நெல்லை முறையாக கொள்முதல் செய்திருக்க வேண்டும். அதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் மூடைக்கு 40 ரூபாய் கமிஷன் கேட்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் தமிழகம் முழுவதும் பயிருக்காக 5 ஆயிரம் கோடி செலவு செய்ததாக சொல்கிறார்கள். அதை எங்கே செய்தார்கள் என்பதுதான் கேள்வி.

ஆனால் முதல்-அமைச்சரிடம் கேட்டால் 95 சதவீதம் வேலையை முடித்து விட்டோம் 5 சதவீதம்தான் பாக்கி என்று சொல்கிறார். அப்படி என்றால் 5 ஆயிரம் கோடி ரூபாயில் 95 சதவீத பணிகள் எங்கே முடிந்தது என விளக்கமாகக் கேட்டால் சொல்லத் தெரியாது. குருவை சாகுபடியில் குளறுபடி இருக்கிறது என்று நாங்கள் சொல்கிறோம். பொய் குற்றச்சாட்டில் அறுவை சாகுபடி நாங்கள் செய்யவில்லை.

வரக்கூடிய தேர்தல்களில் எஸ்.ஐ.ஆர். நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என தேர்தல் ஆணையம் கூறியதில் என்ன தவறு இருக்கிறது? முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்று ஒரு வழக்கு தொடர்ந்திருக்கிறார். சென்னையில் ஒரு தொகுதியில் 13 ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்டு இருக்கிறது. அதில், ஆளுங்கட்சி அமைச்சர்கள் தலையிட்டு இருக்கிறார்கள்.

பீகார் மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்கள் குறைக்கப்பட்டுள்ளதாக சொன்னார்கள். 30 லட்சம் பேர் அதில் இறந்து போனவர்கள், மீதி இருப்பதில் 20 லட்சம் பேர் வெளியூர்களில் இருக்கிறார்கள். பீகாரில் நீக்குவதை குறை சொன்னார்கள். ஆனால் தமிழ்நாட்டில் குளத்தூர் தொகுதியில் 9 ஆயிரம் வாக்குகள் அதிகமாக இருக்கிறது. அதற்கான ஆதாரங்கள் உள்ளன.

சமூக நீதி குறித்து பேசுகிறார்கள். காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். அதில், தான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் செம்பரம்பாக்கம் ஏறி திறப்பு விழாவிற்கு எங்களை அழைக்கவில்லை என்று சொல்லி இருக்கிறார். சமூக நீதி பற்றி பேசுபவர்கள் கூட்டணிக்குள்ளேயே சமூக நீதி இல்லை என்றால், தமிழ்நாட்டில் எப்படி சமூக நீதி தர முடியும்?”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story