விஜய்க்கு ஸ்கிரிப்ட் எழுதிக்கொடுப்பவர்கள் கவனமாக எழுத வேண்டும் - தமிழிசை

விஜய் பாஜகவை எதிர்ப்பதில் அர்த்தமில்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
சென்னை,
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
தம்பி விஜய் கடந்த சில நாட்களாக கூட்டத்தை கூட்டி பிரசாரம் செய்து வருகிறார். அவரிடம் ஒன்று கூறிக்கொள்கிறேன். அவருக்கு ஸ்கிரிப்ட் எழுதிக்கொடுப்பவர்கள் சரியாக எழுதிக்கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பிரதமர் மோடி பதவிக்காலத்தில் 3,700 பேர் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். தூக்கு தண்டனையில் இருந்து 6 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நாகையில் ரெயில் தொழிற்சாலை இருந்தது என்றும், இப்போது இல்லை என்றும் சொல்லியிருக்கிறார். பெரம்பூர் ரெயில் தொழிற்சாலையில் 75 ஆயிரம் ரெயில் பெட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. 65 வந்தே பாரத் ரெயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விஜய் சொல்வதை சரியாக சொல்ல வேண்டும். விஜய் பிரசாரத்திற்கு வருபவர்கள், அவர் பேசுவதை கேட்பதற்காக வரவில்லை. ஓட்டு போடவும் வரவில்லை. அவரை பார்ப்பதற்காக வருகின்றனர்.
தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஷூட்டிங்கில் இருந்த விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார். அரசியலில் இருந்த மு.க.ஸ்டாலின் ஷூட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார். விஜய் திமுகவை எதிர்ப்பதை தீவிரப்படுத வேண்டும். பாஜகவை எதிர்ப்பதில் அர்த்தமில்லை. ஏனெனில், பாஜக நல்லாட்சி நடத்திக்கொண்டு இருக்கிறது.”
இவ்வாறு அவர் பேசினார்.






