இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 28-12-2025


LIVE
இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 28-12-2025
x
தினத்தந்தி 28 Dec 2025 9:27 AM IST (Updated: 28 Dec 2025 3:04 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 28 Dec 2025 3:04 PM IST

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், டிச.31ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைமை அறிவிப்பு

  • 28 Dec 2025 1:26 PM IST

    ‘2025-ல் இந்தியாவின் தாக்கம் எல்லா இடங்களிலும் தெளிவாக தெரிந்தது’ - பிரதமர் மோடி

    இந்த ஆண்டின் கடைசி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் இன்று அவர் பேசியதாவது;-

    “2025-ம் ஆண்டு இந்தியாவுக்குப் பெருமைமிக்க மைல்கற்களைக் கொண்ட ஆண்டாக அமைந்தது. தேசிய பாதுகாப்பு, விளையாட்டு, அறிவியல் கண்டுபிடிப்புகள், உலகின் மிகப்பெரிய துறைகள் என எதுவாக இருந்தாலும், இந்தியாவின் தாக்கம் எல்லா இடங்களிலும் தெளிவாக தெரிந்தது.

    அறிவியல் மற்றும் விண்வெளித் துறையில் இந்தியா ஒரு மாபெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. சுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த முதல் இந்தியர் ஆனார்.” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

  • 28 Dec 2025 1:23 PM IST

    குற்றால அருவிகளில் ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள்

    குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று வார விடுமுறை என்பதாலும், காலை முதலே சுற்றுலா பயணிகள் திரண்டனர். மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். அதேபோல் சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்கள் பலரும் இங்கு வந்து புனித நீராடிவிட்டு குற்றாலநாதர் கோவிலுக்கு சென்றதை பார்க்க முடிந்தது.

  • 28 Dec 2025 12:39 PM IST

    சென்னையில் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது

    சென்னையில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் 3-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போராட்டத்தை கைவிட போலீசார் கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் போராட்டத்தை கைவிட மறுப்பு தெரிவித்து ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் கைதை கண்டித்து ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

  • 28 Dec 2025 12:10 PM IST

    பீகாரில் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து

    பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் நேற்று நேற்று இரவு 11.25 மணியளவில் கிழக்கு ரெயில்வேயின் ஆசன்சோல் கோட்டத்திற்கு உட்பட்ட லஹாபோன் மற்றும் முல்தலா ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.

    சரக்கு ரெயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டன. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து காரணமாக ஹவுரா-பாட்னா-டெல்லி வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

  • 28 Dec 2025 12:08 PM IST

    தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணன் அதிமுகவில் இருந்து நீக்கம்

    தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணன் நேற்று தவெகவில் இணைந்தார். இந்த நிலையில், பல்பாக்கி கிருஷ்ணனை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

  • 28 Dec 2025 11:16 AM IST

    திருவண்ணாமலையில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்: 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், அரையாண்டு விடுமுறை என்பதாலும், திருவண்ணாமலை கோவிலில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இதனால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்தனர். அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். பொது தரிசன வழியில் சென்ற பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சுமார் 6 மணி நேரம் ஆனதாக தெரிவித்தனர்.  

  • 28 Dec 2025 10:33 AM IST

    அருமை நண்பர் விஜயகாந்த் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

    அருமை நண்பர் விஜயகாந்த் நற்பணிகளை நினைவுகூர்வதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

    ”'கேப்டன்' விஜயகாந்த் நினைவுநாள்; ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர் - தே.மு.தி.க. நிறுவனர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்.”

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • 28 Dec 2025 10:17 AM IST

    விஜயகாந்த் நினைவிடத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்

1 More update

Next Story