இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 01-07-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 1 July 2025 8:00 PM IST
பிரதமர் மோடி நாளை முதல் 9-ந்தேதி வரையிலான 8 நாட்களில் பிரேசில், கானா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், பிரதமரின் இந்த நீண்டகால பயணம் அமையவுள்ளது. இதன்படி அவர் 2 கண்டங்களில் உள்ள கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு செல்கிறார்.
இந்த பயணத்தில் பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். அதனுடன் உலகளாவிய தெற்கு பகுதியில் பல்வேறு முக்கிய நாடுகளுடனான இந்தியாவின் நட்புறவை விரிவாக்கம் செய்யும் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுகிறார்.
- 1 July 2025 7:54 PM IST
சிவகங்கை இளைஞர் மரண வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்; முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற 28 வயது இளைஞர் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்தது, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஐகோர்ட்டு மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல் துறை விசாரணையின்போது மரணம் அடைந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி முதல் அமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் . விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இது யாராலும் நியாயப்படுத்த முடியாத செயல் எனவும் முதல் அமைச்சர் கூறியுள்ளார்.
- 1 July 2025 7:03 PM IST
போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்த சிவகங்கை, மடப்புரம் இளைஞர் அஜித்குமார் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அஜித் குடும்பத்தினரை அமைச்சர் பெரிய கருப்பன் சந்தித்து பேசியபோது முதல்-அமைச்சர் தொலைபேசி வாயிலாக பேசி ஆறுதல் கூறினார். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் உறுதியளித்தார். வருத்தமாக இருக்கிறது. மனதை தேற்றிக்கொள்ளுங்கள் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார் என அஜித்குமாரின் தாயார் மாலதி அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
- 1 July 2025 6:45 PM IST
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு!கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்! - முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்
- 1 July 2025 6:42 PM IST
டி.என்.பி.எல். தகுதி சுற்று 1 போட்டியில், திருப்பூருக்கு எதிராக டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
- 1 July 2025 6:24 PM IST
காவல் துறை என்ற பெயரில் நடமாடும் மிருகங்கள் என தி.மு.க.வை சேர்ந்த திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் கூறியுள்ளார். கட்சிக்காரன் கஷ்டப்பட்டு எடுத்த பெயரை கெடுக்காதீர்கள் என காவல் துறையை அவர் கடுமையாக விமர்சித்து உள்ளார். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
- 1 July 2025 5:59 PM IST
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டம் மூலம் யுபிஎஸ்சி தேர்விற்கு கட்டணமில்லாமல் உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழ்நாடு இளைஞர்கள் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இருக்கும் வேலைவாய்ப்புகளை பெறும் வகையில், இந்தப் பிரிவு செயல்படுகிறது. அதாவது, இளைஞர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் யுபிஎஸ்சி, ரெயில்வே உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு கட்டணம் எதுவும் இன்றி பயிற்சி அளிக்கப்படுகிறது.
யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கு தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும். அதேபோல, யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்து மெயின்ஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இத்திட்டத்தின் வாயிலாக 25,000 ரூபாய் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
இத்திட்டம் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வரும் தேர்விற்கு தேர்வர்களை தயார்படுத்தும் வகையில், யுபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வுக்கான ரூ. 25 ஆயிரம் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் தொடங்கி உள்ளது. இதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில் தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டம் கீழ் உதவித்தொகை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் வரும் 13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.














