இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-07-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 2 July 2025 12:21 PM IST
பாமக எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்கினார் அன்புமணி
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கு இடையே கடந்த சில வாரங்களாக கருத்து மோதல் அதிகரித்து வரும் நிலையில், பாமக சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
அன்புமணிக்கு எதிராக எம்.எல்.ஏ. அருள் கருத்துகளை கூறி வந்த நிலையில் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் டாக்டர் ராமதாசுக்கு ஆதரவாக அருள் எம்.எல்.ஏ. இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- 2 July 2025 12:16 PM IST
சங்கரன்கோவில் திமுக நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரி பதவி இழப்பு
நகர்மன்ற தலைவிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் 29 கவுன்சிலர்கள் கலந்துகொண்டதில், உமா மகேஸ்வரி ஒரு வாக்கு மட்டுமே பெற்றார்.
- 2 July 2025 12:13 PM IST
ஒரே வரியில் "சாரி" என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்..? - நயினார் நாகேந்திரன் கேள்வி
தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட அஜித் குமாரின் தாயிடம் “"சாரி மா" என்று சொல்லும் நேர்த்தியாக வெட்டி ஒட்டப்பட்ட காணொளியை செய்திகளில் பார்த்தேன்.
ஒரு அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு, ஒரே வரியில் “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் தடுப்பது தானே காவல் துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு முதல்-அமைச்சரின் கடமை?
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2 July 2025 12:00 PM IST
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி பிரச்சினை - மத்தியஸ்தர் நியமனம்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜ் மத்தியஸ்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திரைப்படங்கள் தயாரிப்புக்கு இடையூறு இல்லாமல் ஒத்துழைப்பு வழங்க பெப்சி அமைப்புக்கு உத்தரவிட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தநிலையில், மத்தியஸ்தர் நியமிக்கப்பட்டு விட்டதாக கூறி, உத்தரவு பிறப்பிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
- 2 July 2025 11:53 AM IST
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கடிதம் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் கலெக்டர் அலுவலக வளாகம், கார் பார்க்கிங் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் மோப்ப நாய்களுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2 July 2025 11:38 AM IST
தமிழ்நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளைக் கலைக்க டி.ஜி.பி. உத்தரவு
சிவகங்கை திருப்புவனம் சம்பவம் எதிரொலியாக, தமிழ்நாடு முழுவதும், காவல்துறையில் அதிகாரிகளுக்குக் கீழ் இயங்கும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளைக் கலைக்க டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி அங்கீகரிக்கப்பட்ட சிறப்புப் பிரிவுகளை தவிர்த்து எந்தவிதமான தனிப்படைகளும் செயல்படக்கூடாது என்றும், உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல் படியே முக்கியமான வழக்குகளுக்கு சிறப்புப் பிரிவு அமைக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- 2 July 2025 11:36 AM IST
இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு: காவல் நிலையத்தில் நீதிபதி விசாரணை
இளைஞர் அஜித்குமார் மரணம் தொடர்பாக திருப்புவனம் காவல் நிலையத்தில் மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.
- 2 July 2025 11:27 AM IST
"கொரோனா தடுப்பூசிக்கும், திடீர் மரணங்களுக்கும் தொடர்பில்லை.." - மத்திய சுகாதரத்துறை
“கொரோனா தடுப்பூசிகளுக்கும் திடீர் மரணங்களுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை“ என்று மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது
- 2 July 2025 11:26 AM IST
நாளை வெளியாகிறது ராமாயணா படத்தின் டீசர்
நிதேஷ் திவாரி இயக்கும் ராமாயணா திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது. இதில் முதல் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளது.
- 2 July 2025 10:59 AM IST
இளைஞர் அஜித்குமார் தம்பிக்கு அரசுப்பணி.. குடும்பத்திற்கு இலவச வீட்டுமனைபட்டா
திருப்புவனம் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிவாரணங்களை அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட கலெக்டர் பொற்கொடி ஆகியோர் வழங்கினர். இதன்படி அஜித்குமாரின் தம்பி நவீன் குமாருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையும், குடும்பத்தினருக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்கப்பட்டது.
















