இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-07-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 2 July 2025 6:59 PM IST
டி.என்.பி.எல். வெளியேற்றுதல் சுற்று போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
- 2 July 2025 5:52 PM IST
த.வெ.க. கொடியில் யானை சின்னம் பயன்படுத்துவதற்கு தடை கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்படி கூறி த.வெ.க.வுக்கு, சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
- 2 July 2025 4:56 PM IST
சாட் ஜிபிடியை அதிகம் நம்ப வேண்டாம் என்று ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன் அறிவுறுத்தியுள்ளார். கண்ணை மூடிக்கொண்டு சாட் ஜிபிடியை நம்ப வேண்டாம் என எச்சரித்து உள்ள அவர், அதனை ஆய்வு செய்து கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது என பயனாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
- 2 July 2025 4:37 PM IST
இங்கிலாந்தின் லண்டன் நகரில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கோகோ காப் (அமெரிக்கா), உக்ரைனின் தயானா யாஸ்ட்ரெம்ஸ்கா உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் அனுபவ வீராங்கனையான கோகோ காப் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட தயானா யாஸ்ட்ரெம்ஸ்கா 7-6 (7-3), 6-1 என்ற செட் கணக்கில் கோகோ காப்பை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி கண்ட கோகோ காப் தொடரில் இருந்து வெளியேறினார்.
- 2 July 2025 4:16 PM IST
முதல்-மந்திரி சித்தராமையாவிடம், கர்நாடகாவில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீங்களே முதல்-மந்திரியாக பதவி வகிப்பீர்களா? என செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ஆம். நானே பதவியில் நீடிப்பேன். உங்களுக்கு அதில் என்ன சந்தேகம் உள்ளது? என பதிலுக்கு கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் கட்சி ஒன்றுபட்டு உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒரு பாறை போன்று ஆட்சி அதிகாரத்தில் நீடிக்கும் என்றும் கூறினார். அதனால், அடுத்த 5 ஆண்டுகள் முழுவதும் அவர் பதவியில் இருப்பார் என உறுதிப்படுத்தி உள்ளார்.
- 2 July 2025 3:52 PM IST
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம்: தவெக கண்டன ஆர்ப்பாட்டம் தேதி, இடம் மாற்றம்
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து நாளை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தவெக கண்டன ஆர்ப்பாட்டம் தேதி, இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில்,
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்துத் தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும், கழகத் தலைவர் விஜய் உத்தரவின் பேரில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்ட இடம் அன்றைய தேதியில் வேறு காரணத்திற்குப் பயன்படுத்தப்பட இருப்பதாகக் கூறி காவல் துறையால் அளிக்கப்பட்ட மாற்று இடத்தில் (சென்னை, சிவானந்தா சாலையில்) 06.07.2025 ஞாயிறு அன்று காலை 10.00 மணிக்குக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை நம் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.










