இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 19 Aug 2025 5:01 PM IST
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை தண்டனைக்குரிய குற்றமாக்கும் இந்த மசோதா, நாளை (ஆக.20) மக்களவையில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
- 19 Aug 2025 4:56 PM IST
குறைந்தபட்ச மாத கட்டணத்தை உயர்த்திய ஜியோ..!
குறைந்தபட்ச மாத கட்டணத்தை ஜியோ நிறுவனம் உயர்த்தி உள்ளது. அதன்படி தினசரி 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை வழங்கும் 209 ரூபாய் மற்றும் 249 ரூபாய் ரீசார்ஜ் திட்டங்களை ஜியோ நிறுவனம் நீக்கியுள்ளது. ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச மாதந்திர கட்டணம் 299 ரூபாயாக அதிகரிக்கப்பட்டதால் ரிலையன்ஸ் பங்குகள் 2 சதவீதம் உயர்ந்துள்ளது.
- 19 Aug 2025 4:53 PM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1.01 லட்சம் கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1.01 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 50,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 118.37 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 90.895 டி.எம்.சி. ஆக உள்ளது.
- 19 Aug 2025 4:08 PM IST
வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட இருசக்கர வாகனம்
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கனமழை காரணமாக சிம்லா பைபாஸ் சாலையில் தரைபாலத்தை கடந்து வெள்ளம் பாய்ந்தோடியது. அப்போது, பாலத்தை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் வெள்ளத்தின் வேகத்தில் கீழே விழுந்தது. விபரீதத்தை உணராத அப்பகுதி இளைஞர்கள், வாகனத்தை மீட்க முயன்றனர். 5 இளைஞர்கள் ஒன்றிணைந்து வாகனத்தை மீட்க முயன்றபோதிலும், ஆர்ப்பரித்துச் சென்ற வெள்ளம் வாகனத்தை இழுத்துச் சென்றது.
- 19 Aug 2025 4:04 PM IST
நிர்மலா சீதாராமனுடன் கனிமொழி எம்.பி., அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை, திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சந்தித்து பேசினர். அப்போது தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நபார்டு நிதியை உடனே விடுவிக்க வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த கடிதத்தை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் வழங்கினர்.
- 19 Aug 2025 3:50 PM IST
அமெரிக்காவில் இந்திய முறையில் வணக்கம் வைத்த இத்தாலிய பிரதமர்; வைரலான வீடியோ
டிரம்பின் உதவியாளரான அமெரிக்காவின் மோனிகா கிரவுலி வரவேற்றார். அதற்கு பதிலுக்கு மெலோனி, இந்திய முறையில் கரங்களை கூப்பி நமஸ்தே என வணக்கம் தெரிவித்து கொண்டார்.
இத்தாலியில் இதற்கு முன்பு நடந்த ஜி7 உச்சி மாநாட்டின்போது, வருகை தந்த தலைவர்களை இதேபோன்று நமஸ்தே என கூறி மெலோனி வரவேற்றார்.
- 19 Aug 2025 3:49 PM IST
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: சிறப்பு குழு அமைக்க கோர்ட்டு உத்தரவு
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில், சொத்து வரி சரியாக நிர்ணயம் செய்திருப்பதை உறுதிப்படுத்த சிறப்புக் குழுக்களை அமைக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி விளக்கம் அளிக்கையில், “கடந்த 15 ஆண்டுகளாக முறைகேடுகளை குறித்து சிறப்பு குழு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை விசாரணையில் ரூ.2 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் 17 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் அனைத்து வரி ஏய்ப்பு மற்றும் முறைகேடுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு, கைது நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்தார்.
- 19 Aug 2025 3:44 PM IST
‘தர்மதுரை’ திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவு
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘தர்மதுரை’ திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
- 19 Aug 2025 3:41 PM IST
மசோதா ஒப்புதல்: ஜனாதிபதி விளக்கம் கோரிய விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு நிர்ணயித்த தீர்ப்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விளக்கம் கோரிய விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பிலேயே, ஜனாதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு பதில் உள்ளது என தமிழ்நாடு அரசு சார்பில் அபிஷேக் சிங்வி வாதிட்டார்.
காவிரி, குஜராத் சட்டப்பேரவை வழக்குகளில் ஜனாதிபதி மூலம் எழுப்பிய கேள்விகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இந்த விளக்கம் கோரிய மனுவையும் திரும்ப அனுப்ப வேண்டும் என கேரளா சார்பில் வாதிடப்பட்டது. கவர்னருக்கு எதிராக தமிழ்நாடு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை நாங்கள் மறு ஆய்வு செய்யவில்லை. அதில் ஜனாதிபதி எழுப்பிய கேள்விகள் குறித்தே வாதங்களைக் கேட்கிறோம் என நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
















