இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 19 Aug 2025 3:37 PM IST
தமிழக மீனவர்கள் 9 பேருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்
இலங்கை கடற்படையால் கடந்த மாதம் 29-ம் தேதி கைது செய்யப்பட்ட பாம்பன் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்களும் தலா ரூ.1 லட்சம் அபராதம் செலுத்தினால் விடுதலை என அந்நாட்டின் புத்தளம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அபராதத் தொகையை கட்டாத பட்சத்தில் 3 மாத காலம் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- 19 Aug 2025 3:15 PM IST
2025 ஆசிய கோப்பை: சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு
2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, சூர்ய குமார் யாதவ் (C), சுப்மன் கில் (VC), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் தூபே, அக்சர் படேல், ஜித்தேஷ் ஷர்மா (WK), பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (WK), ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங் அணியில் ஆகியோர் உள்ளனர்.
- 19 Aug 2025 3:12 PM IST
எடப்பாடி பழனிசாமி இத்தோடு நிறுத்திக்கொள்வது நல்லது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்து கூறியதாவது:-
ஒரு பழமொழி சொல்வார்கள் “அரண்டவன் கண்ணுக்கு மிரண்டதெல்லாம் பேய்’ என்பதுபோல, அவருக்கு ஆம்புலன்ஸை பார்த்தால் வேறு ஏதோ நினைவு வருகிறதுபோல. ஒரு முன்னாள் முதல்-அமைச்சர் இப்படி மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசுவது அநாகரிகமான செயல். இப்படி பேசுவதை எடப்பாடி பழனிசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும்; அதுதான் நல்லது. இப்படி பேசுவதால் அவருக்குதான் எதிர்ப்பு அதிகமாகும். ஆம்புலன்சை வேண்டுமென்றே அனுப்பியதாக கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது. இவ்வாறு அவர் கூறினார்.
- 19 Aug 2025 3:07 PM IST
சட்டவிரோத மதுபான விற்பனை: 14,922 பேர் கைது
வட மாவட்டங்களில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட 14,922 பேர் கடந்த ஓராண்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். இதில் 5,870 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 123 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 12,949 பேருக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்
- 19 Aug 2025 2:57 PM IST
பிரதமர் மோடி இம்மாத இறுதியில் சீனா பயணம்
பிரதமர் மோடி இம்மாத இறுதியில் சீனாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். 31ம் தேதி சீனா செல்லும் பிரதமர் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த பயணத்தின்போது சீன அதிபரை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது வர்த்தகம், இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவர் என தகவல் வெளியாகியுள்ளது.
- 19 Aug 2025 1:53 PM IST
கிட்னி விற்பனை விவகாரம் - ஐகோர்ட்டு மதுரை கிளை காட்டம்
சட்டவிரோத கிட்னி விற்பனை விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட கோரி ஐகோர்ட்டு மதுரை கிளை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் கிட்னி மற்றும் உடல் உறுப்புகள் விற்பனை செய்வதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏழை, எளிய மக்கள் உயிர் வாழும் உரிமையை பாதுகாப்பது அரசின் கடமை என்று ஐகோர்ட்டு மதுரை கிளை அமர்வு நீதிபதிகள் தெரிவித்தனர்.
- 19 Aug 2025 1:47 PM IST
2 அடுக்காக மாறும் ஜி.எஸ்.டி... மாநில மந்திரிகள் குழு நாளை ஆலோசனை
6 பேரை கொண்ட மாநில மந்திரிகள் குழு கூட்டம் நாளையும் (புதன்கிழமை), நாளை மறுநாளும் (வியாழக்கிழமை) டெல்லியில் நடக்கிறது. அதில், 2 அடுக்குகளாக ஜி.எஸ்.டி. மாற்றப்படுவது பற்றி குழு ஆலோசனை நடத்துகிறது.
மத்திய அரசு இக்குழுவில் இடம்பெறவில்லை. இருப்பினும், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அந்த கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தை மந்திரிகள் குழு நன்றாக புரிந்து கொள்ளவும், சீர்திருத்தத்தின் பின்னால் உள்ள சிந்தனையை தெரிந்து கொள்ளவும் நிர்மலா சீதாராமன் உரை உதவும் என்று கருதப்படுகிறது.
- 19 Aug 2025 1:45 PM IST
ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கைக்கு விளக்கமளிக்க அன்புமணிக்கு மேலும் அவகாசம்
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் இன்று ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அன்புமணிக்கு மேலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரைக்குப் பின், அன்புமணிக்கு ஆகஸ்ட் 31ம் தேதி வரை கெடு விதித்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- 19 Aug 2025 1:41 PM IST
46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ரஜினி- கமல்?
இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்று தெரிகிறது.
- 19 Aug 2025 1:28 PM IST
ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு நற்செய்தி: ரூ.1,138 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வு கால பண பலன்களை வழங்கும் வகையில் முதற்கட்டமாக ரூ.1,137. 97 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
















