இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-06-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-06-2025
x
தினத்தந்தி 1 Jun 2025 9:38 AM IST (Updated: 1 Jun 2025 8:05 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 1 Jun 2025 2:28 PM IST

    எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சித்த வீடியோவுக்கு வருத்தம் தெரிவித்தார் ஆதவ் அர்ஜுனா 


    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து தான் விமர்சனம் செய்த வீடியோவுக்கு தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வருத்தம் தெரிவித்துள்ளார்.

    வீடியோவில் வெளியான வார்த்தைகள் தனது இயல்பை மீறி வெளிப்பட்டதாகவும், அதற்காக உண்மையாகவும், நேர்மையாகவும், வருந்துவதாகவும் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

  • 1 Jun 2025 1:46 PM IST

    4-ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வருகிற 4-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 1 Jun 2025 12:46 PM IST

    எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள்

    அதிமுக சார்பாக மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட அவை தலைவர் தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மாநிலங்களவை வேட்பாளர்கள் இன்பதுரை, தனபால் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

  • 1 Jun 2025 12:23 PM IST

    யாருடன் கூட்டணி என்பதை ஜனவரியில் அறிவிப்போம்: பிரேமலதா விஜயகாந்த்

    தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,

    தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் என 2024ல் கையெழுத்து போட்டு கொடுத்தார்கள். அப்போதே, ஒப்பந்தம் போடும் போது, எந்த ஆண்டில் என அதில் குறிப்பிடப்படவில்லை. அப்போதே ஆண்டைக் குறிப்பிட்டு அளிக்கத் தெரிவித்தோம். ஆனால், ஆண்டு குறிப்பிட்டு அளிப்பது நடைமுறையில் இல்லை என அதிமுக தெரிவித்தது.

    2026 தேர்தலை ஒட்டி மாநிலங்களவை சீட் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே அந்த தேர்தலை ஒட்டிதான் எங்களின் அரசியல் நகர்வு இருக்கும். அதிமுக கூட்டணியில் தொடர்வோமா? என்பதை அடுத்தாண்டு ஜனவரி கடலூர் மாநாட்டில் அறிவிப்போம் என்று கூறினார்.

  • 1 Jun 2025 12:19 PM IST

    ஓரணியில் தமிழ்நாடு; புதிய உறுப்பினர் சேர்க்கை திட்டம் - மு.க.ஸ்டாலின்

    திமுக பொதுக்குழுவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு தீர்மானத்தை முன்மொழிந்து பேசியதாவது:-

    நமது மண், மொழி, மானம் காத்திடவும் தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் இணைந்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திடும் பொருட்டு “ஓரணியில் தமிழ்நாடு" என்னும் புதிய உறுப்பினர் சேர்க்கையை கழகம் முன்னெடுக்க வேண்டும். புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை நிர்வாகிகள் கண்காணித்து வெற்றிகரமாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

  • 1 Jun 2025 11:28 AM IST

    மாநிலங்களவை தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

    மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை மற்றும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அதிமுக அறிவித்துள்ளது. மேலும் தேமுதிகவிற்கு வரும் 2026-ஆம் ஆண்டு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்றும் அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும் என்றும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

  • 1 Jun 2025 11:07 AM IST

    ராமதாஸ் உடன் பாமக நிர்வாகிகள் சந்திப்பு

    பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதனிடையே அன்புமணி ராமதாஸ் மீது, டாக்டர் ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் விழுப்புரம், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை கட்சியின் மூத்த நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

  • 1 Jun 2025 10:50 AM IST

    பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு திமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம்

    பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களுக்கு இரங்கல் தெரிவித்து திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து தேமுதிக நிறுவனர் விஜயகாந்த், போப் பிரான்சிஸ், மன்மோகன் சிங், என்.சங்கரய்யா, எம்.எஸ்.சுவாமிநாதன், சீத்தாராம் யெச்சூரி, குமரி அனந்தன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், முரசொலி செல்வம் உள்ளிட்ட ஏராளமான முக்கிய தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • 1 Jun 2025 10:25 AM IST

    திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

    தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உரிய விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும், 47 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மதுரையில் இன்று நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயம் போன்ற முகப்பு தோற்றத்துடன் பொதுக்குழு நடைபெறும் அரங்கின் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.

    அரங்கின் நுழைவு வாயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்து பொதுக்குழுவை தொடங்கி வைத்தார். பொதுக்குழுவில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் என பலரும் பேசுகின்றனர். இறுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். மதியத்திற்கு பிறகு கருத்தரங்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

    வருகிற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த பொதுக்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. பல்வேறு அதிரடி தீர்மானங்களும் நிறைவேற்றப்பட இருக்கின்றன. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு உள்ள நிலையில், திமுக பொதுக்குழு அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    முன்னதாக திமுக பொதுக்குழு மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் பேராசிரியர் அன்பழகன் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

  • 1 Jun 2025 10:19 AM IST

    52 பேருக்கு பணி நியமன ஆணை

    மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு உடற்கல்வி, தையல் மற்றும் இசை ஆசிரியர் பொறுப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 45 நபர்களுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 7 தட்டச்சர்களுக்கும் பணிநியமன ஆணைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

1 More update

Next Story