இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 1 Jun 2025 7:59 PM IST
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா நகரில், இஸ்கான் ரத யாத்திரையில் பயன்படுத்தப்படும் கடவுள் ஜெகந்நாதரின் தேருக்கு இனி, புதிய சுகோய் போர் விமானத்தின் டயர்கள் பயன்படுத்தப்படும். இதுவரை போயிங் 747 ரக விமானத்தின் டயர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதன் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.
ரஷியாவின் சுகோய் போர் விமானம், மேலே எழும்பியதும் மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்ல கூடிய திறன் படைத்தது. இந்த டயர்கள் இனி தேருக்கு பயன்படுத்தப்படும்போது, மணிக்கு 1.4 கி.மீ. என்ற வேகத்தில் தேர் எளிதில் நகர்ந்து செல்லும்.
- 1 Jun 2025 7:54 PM IST
கன்னியாகுமரி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் ஓடும் ரெயிலின் படிக்கட்டில் நின்று நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோ வைரலான நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க ரெயில் பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 1 Jun 2025 7:36 PM IST
மும்பைக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்நிலையில், மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
- 1 Jun 2025 7:04 PM IST
ஐ.பி.எல். 2025: டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு
இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை தீர்மானிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
இதில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி கண்ட பஞ்சாப் கிங்ஸ். வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த சீசனில் இவ்விரு அணிகளும் ஏற்கனவே லீக்கில் ஒரு முறை சந்தித்து இருக்கின்றன. இதில் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் கால் பதிக்கும். அத்துடன் முதலாவது தகுதி சுற்றில் செய்த தவறுகளை களைந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைய தீவிரம் காட்டும்.
அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து 7-வது முறையாக இறுதிப்போட்டியை எட்ட மும்பை அணி வரிந்து கட்டும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதன்படி மும்பை அணி முதலாவதாக பேட்டிங் செய்ய உள்ளது.
- 1 Jun 2025 6:56 PM IST
கோடை விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து மக்கள் புறப்பட்டு செல்கின்றனர். இந்நிலையில், நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை நோக்கி மக்கள் வருகின்றனர். இதில், அந்தியோதயா விரைவு ரெயிலில் பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு ஏறினர்.
- 1 Jun 2025 6:36 PM IST
தமிழகத்தில் நடக்கும் ரெயில்வே திட்டங்களுக்கு, மத்திய பட்ஜெட்டில், 6,626 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், புதிய ரெயில் பாதை திட்டங்களுக்கு மட்டும், 617 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் நடக்கும், 10 ரெயில் திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதியை மட்டும், பல்வேறு காரணங்களை முன்வைத்து, தெற்கு ரயில்வே திருப்பி அனுப்பியது என தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு, தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.
அதில், நிதியை அடுத்த காலாண்டுகளுக்கு மாற்றுவது தொடர்பான தகவல் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு உள்ளது. தெற்கு ரெயில்வேயில் நிதிப்பற்றாகுறை இல்லை. தேவைக்கேற்ப திட்டங்களுக்கு நிதி கிடைக்கிறது. காலாண்டிற்குள் முழுமையாக பயன்படுத்தப்படாத நிதி பிற திட்டங்களுக்கு மாற்றப்படுகிறது என தெரிவித்து உள்ளது.
- 1 Jun 2025 5:55 PM IST
அசாம் மாநிலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான சமூக ஊடக பதிவுகளை வெளியிட்ட 2 பேர் சமீபத்தில் கம்ரூப் மற்றும் சோனித்பூர் மாவட்டங்களில் கைது செய்யப்பட்டனர். அவர்களில், முகமது தில்பார் உசைன் என்பவரை சோனித்பூர் போலீசார் கைது செய்தனர். ஹபிசூர் ரகுமான் கம்ரூப் என்பவரை கம்ரூப் போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், பாகிஸ்தானுக்கு கருணை காட்டும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட்ட தேச விரோதிகள் 81 பேர் இன்று வரை (ஜூன் 1) கைது செய்யப்பட்டு உள்ளனர் என பதிவிட்டு உள்ளார்.
- 1 Jun 2025 5:22 PM IST
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதன்படி அருணாசல பிரதேசம், அசாம், மணிப்பூர், திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் வெள்ளம் வழிந்தோடுகிறது. பிரம்மபுத்திரா ஆற்றிலும் நீர் வரத்து அதிகரித்து, அதன் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
வருகிற நாட்களில் கூடுதலாக மழை பெய்ய கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிவப்பு எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.
இந்த மாநிலங்களில் கனமழை, வெள்ளம் ஆகியவற்றால் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், தொடர் கனமழை பெய்து வரும் சூழலில் அசாம், சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் மணிப்பூர் கவர்னரை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன்.
எந்தவொரு கடினம் வாய்ந்த சூழலையும் எதிர்கொள்வதற்கு சாத்தியப்பட்ட எல்லா உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என உறுதியளித்தேன். வடகிழக்கு மாநில மக்களுக்கு ஒரு பாறை போன்று மோடி அரசு துணையாக நிற்கும் என பதிவிட்டு உள்ளார்.
- 1 Jun 2025 4:55 PM IST
ஐ.பி.எல். தகுதி சுற்று 2: பஞ்சாப் அணியில் சாஹல் களமிறங்குவாரா..?
மணிக்கட்டு காயம் காரணமாக கடந்த 3 ஆட்டங்களை தவற விட்ட பஞ்சாப் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் இந்த ஆட்டத்தில் களமிறங்குவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
- 1 Jun 2025 4:53 PM IST
2026-ல் வரலாறு காணாத வெற்றிக்கு மதுரை பொதுக்குழு அடித்தளமாக அமையட்டும்: உதயநிதி ஸ்டாலின்
துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தலைநகரான மதுரையில், கழகத்தலைவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெருமைக்குரிய பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றோம்.
கழகத்தின் கொள்கைகள் - திராவிட மாடல் அரசின் சாதனைகளை அடுத்து வரும் ஒவ்வொரு நாளும் மக்களிடம் எடுத்துச் செல்வோம்.
நம் முதல்-அமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தி, சட்டப்பேரவைத் தேர்தலில் கழக கூட்டணியை 200-க்கும் அதிகமான இடங்களில் வெல்லச் செய்ய பொதுக்குழுவில் உறுதியேற்றோம்.2026-இல் கழகம் பெறவிருக்கும் வரலாறு காணாத வெற்றிக்கு மதுரை பொதுக்குழு அடித்தளமாக அமையட்டும்” என தெரிவித்துள்ளார் .