இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 5 Nov 2025 7:20 PM IST
புதிய மினி பஸ் திட்டத்துக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு
சென்னை,
போக்குவரத்து வசதியில்லாத கிராமப்புறங்களுக்கு போக்கு வரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் புதிய மினி பஸ் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஏப்ரலில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தனியார் பஸ் ஆபரேட்டர்கள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த நீதிபதி இந்த வழக்குகளை தள்ளுபடி செய்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பஸ் ஆபரேட்டர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சுரேஷ்குமார், ஹேமன்சந்தன் கவுடா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த திட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தனர். அதேசமயம், பஸ்களுக்கு உரிமம் வழங்கியது என்பது, இந்த மேல் முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனக்கூறி, விசாரணையை ஜனவரி 3-வது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
- 5 Nov 2025 6:12 PM IST
பர்வத மலைக்கு சென்ற நபர் பலி
காலை மலையேற தொடங்கிய நிலையில்; 1265 படிக்கட்டுகள் ஏறி முடித்த போது வலிப்பு ஏற்பட்டு ஈரோட்டை சேர்ந்த தனசேகரன் மயங்கி விழுந்துள்ளார். மருத்துவக்குழுவினருடன் சென்று வனத்துறையினர் சோதித்த போது தனசேகரன் உயிரிழந்தது தெரியவந்தது.
- 5 Nov 2025 5:20 PM IST
இன்று 6.30 மணிக்கு நடக்கும் அதிசயம்
இன்று நிலவு வழக்கத்தை விட 14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் பிரகாசமாகவும் தோன்றும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனை சூப்பர் மூன் என்றும் Beaver Moon என்றும் அழைக்கிறார்கள். இந்தியாவில் இதனை இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு காணலாம். நிலவு பூமிக்கு மிக அருகில் வருவதே இயல்பை விட பெரிதாகத் தெரிய காரணம் ஆகும்.
- 5 Nov 2025 4:27 PM IST
அதிமுகவில் என்னுடன் சில நிர்வாகிகள் தொடர்பில் இருக்கிறார்கள் - செங்கோட்டையன்
நீக்கப்பட்ட பின்பு அதிமுகவில் என்னுடன் சில நிர்வாகிகள் தொடர்பில் இருக்கிறார்கள். அது அவர்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும். அவர்கள் யார் என்று சொன்னால் அவர்களுக்கு ஆபத்தாகி விடும் என செங்கோட்டையன் கூறியுள்ளார்.
- 5 Nov 2025 4:23 PM IST
நெல்லை - குடிநீர் கட்டணத்தை உயர்த்த முடிவு
நெல்லையில் வரும் 10ம் தேதி நடைபெறும் மாமன்ற கூட்டத்தில் கட்டண உயர்வு தொடர்பான தீர்மானம் முன்மொழியப்படவுள்ளது. வீடுகளுக்கான குடிநீர் கட்டணத்தை 50% முதல் 300% வரை உயர்த்தவும் பாதாள சாக்கடை திட்டத்திற்கான வைப்புத் தொகையை அதிகரிக்கவும் பாதாள சாக்கடை திட்டத்திற்கான வைப்பு தொகை ரூ.5,000 ஆக இருந்த நிலையில் கட்டடத்தின் பரப்பளவின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், 600 சதுர அடி வரை கட்டிடம் உள்ள நபர்களுக்கு ரூ.7,500 என்ற விகிதத்திலும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.40,000 வரை நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
- 5 Nov 2025 4:18 PM IST
14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இந்த நிலையில், தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மேலும், நாளை அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 5 Nov 2025 4:14 PM IST
குளியல் அறையில் ரகசிய கேமரா - பெண் கைது
ஓசூர் அருகே பெண் தொழிலாளிகள் தங்கும் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்த பீகாரைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நீலு குமாரி குப்தா (23) ரகசிய கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்களை, அவரின் நண்பரான சதீஷ் குமார் என்பவருக்கும் பகிர்ந்துள்ளதால், அவரையும் கைது செய்ய போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர்.
- 5 Nov 2025 4:12 PM IST
நிதி நிறுவனம் மோசடி - முதலீட்டாளர்கள் சாலை மறியல்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் செயல்படும் டி.ஆர். கார்த்தி சிட்பண்ட்ஸ் என்ற நிதி நிறுவனம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக முதலீட்டாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஏலச்சீட்டு காலம் முடிந்த பிறகும் பணத்தை வழங்காமல் காலம் தாழ்த்துவதாகவும், ஆட்களை வைத்து மிரட்டுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















