தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு - ரிஷப் பண்ட்க்கு மீண்டும் இடம்


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு - ரிஷப் பண்ட்க்கு மீண்டும் இடம்
x
தினத்தந்தி 5 Nov 2025 6:32 PM IST (Updated: 6 Nov 2025 6:29 AM IST)
t-max-icont-min-icon

முதல் டெஸ்ட் போட்டி வரும் 14 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது

மும்பை,

இந்தியாவுக்கு வருகை தரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 14-ந்தேதி கொல்கத்தா ஈடன்கார்டனில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் கவுகாத்தியில் (நவ.22-26) நடக்கிறது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பந்து தாக்கி இடது கால்பாதத்தில் எலும்பு முறிவுக்குள்ளான விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அந்த பாதிப்பில் இருந்து குணமடைந்து விட்டார். தென்ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான டெஸ்டில் 90 ரன்கள் விளாசி தனது உடல்தகுதியையும் நிரூபித்து இருக்கிறார். இதையடுத்து அவர் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். அத்துடன் துணை கேப்டனாகவும் தொடருகிறார்.

இதே போல் முதுகு காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பும் வாய்ப்பு பெற்றுள்ளார். தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் ஜெகதீசன், வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் ரஞ்சி கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு மறுபடியும் அணியில் இடம் கிடைக்கவில்லை.

மற்றபடி வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி வீரர்கள் அப்படியே தொடருகிறார்கள். தற்போது ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் தொடரில் ஆடும் இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா, நிதிஷ்குமார் ரெட்டி, அக்‌ஷர் பட்ேடல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் 8-ந்தேதி தொடர் முடிந்ததும் டெஸ்ட் அணியுடன் இணைந்து கொள்வார்கள்.

இந்திய டெஸ்ட் அணி வருமாறு:-

சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, பும்ரா, வாஷிங்டன் சுந்தர், அக்‌ஷர் பட்டேல், நிதிஷ்குமார் ரெட்டி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப்.

இந்திய ‘ஏ’ அணி தென்ஆப்பிரிக்க ‘ஏ’ அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ராஜ்கோட்டில் (நவ.13, 16 மற்றும் 19-ந்தேதி) விளையாடுகிறது. இதற்கான இந்திய ‘ஏ’அணியும் அறிவிக்கப்பட்டது. திலக் வர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய ‘ஏ’ அணி வருமாறு:- திலக் வர்மா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), அபிஷேக் ஷர்மா, ரியான் பராக், இஷான் கிஷன், ஆயுஷ் பதோனி, நிஷாந்த் சிந்து, விப்ராஜ் நிகம், மனவ் சுதார், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப்சிங், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, பிரப்சிம்ரன் சிங்.

1 More update

Next Story