இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-11-2025


இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-11-2025
x
தினத்தந்தி 7 Nov 2025 9:35 AM IST (Updated: 8 Nov 2025 8:58 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • மாட்டின் வயிற்றில் 10 கிலோ பிளாஸ்டிக்
    7 Nov 2025 6:31 PM IST

    மாட்டின் வயிற்றில் 10 கிலோ பிளாஸ்டிக்

    சிவகங்கை: திருப்புவனத்தில் விபத்தில் உயிரிழந்த கோவில் மாட்டின் வயிற்றில் சுமார் 10 கிலோ அளவில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் சிமெண்ட் சாக்குகள் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். குப்பைகளில் கிடைக்கும் பிளாஸ்டிக் பொருட்களை மாடுகள் அதிகளவில் உண்பதால் இதுபோன்ற நிலை ஏற்படுவதாக வனவிலங்கு ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

  • புழல் ஏரி உபரி நீர் திறப்பு அதிகரிப்பு
    7 Nov 2025 5:34 PM IST

    புழல் ஏரி உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

    சென்னையில் குடிநீர் ஆதாரமாக உள்ள புழல் ஏரியில் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதியம் 12 மணி அளவில் விநாடிக்கு 200 கன அடியாக இருந்த உபரி நீர் திறப்பு தற்போது 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

  • நடிகை கவுரி கிஷன் விவகாரம் – பா.ரஞ்சித் கண்டனம்
    7 Nov 2025 5:21 PM IST

    நடிகை கவுரி கிஷன் விவகாரம் – பா.ரஞ்சித் கண்டனம்

    யூடியூபரின் செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்; அவை ஏற்றுக்கொள்ள முடியாத, வெட்கக்கேடானவை. பெண் நடிகர்கள் இன்னும் இந்த அநாகரீகமான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பது, தமிழ் சினிமா இன்னும் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவு என்பதைக் காட்டுகிறது என்று இயக்குனர் பா ரஞ்சித் கூறியுள்ளார்.

  • இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
    7 Nov 2025 5:18 PM IST

    இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாமக்கல், தூத்துக்குடி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  • மீனவர்களை விடுவிக்ககோரி நாகையில் தவெகவினர் உண்ணாவிரத போராட்டம்
    7 Nov 2025 5:15 PM IST

    மீனவர்களை விடுவிக்ககோரி நாகையில் தவெகவினர் உண்ணாவிரத போராட்டம்

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்களை விடுவிக்ககோரியும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஒப்படைக்க வலியுறுத்தியும், நாகையில் தவெக துணை பொதுச் செயலாளர் ராஜ்மோகன் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட தவெகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • பாடி ஷேமிங் - மோசமான கேள்வி
    7 Nov 2025 4:52 PM IST

    "பாடி ஷேமிங் - மோசமான கேள்வி"

    பாடி ஷேமிங் சாதாரணமானது என்ற மனநிலை ஆபத்து. சமூகவலைதளங்களில் எனக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அது நிம்மதியாக உள்ளது.செய்தியாளர் சந்திப்பின்போது பாதியிலேயே வெளியேற நினைத்தேன்- ஆனால் படத்திற்காக மௌனம் காத்தேன்.

    என்னை மன்னிப்பு கேட்க சொன்னார்கள். ஒரு நகைச்சுவையாக அதை கருதுமாறும் தெரிவித்தார்கள்.பெண்கள் பாடி ஷேமிங் செய்யப்பட்டால் அதை எதிர்த்து அவர்கள் கேள்வி கேட்க வேண்டும் என கவுரி கிஷன் கூறியுள்ளார்.

  • டிஜிபி நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
    7 Nov 2025 4:47 PM IST

    டிஜிபி நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

    தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக தற்போது வெங்கடராமன் உள்ளார். இந்த நிலையில் புதிய டிஜிபி பதவியேற்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் இந்த மனுவை தாக்கல் செய்து இருந்தார்.

    இந்தநிலையில், யுபிஎஸ்சி பரிந்துரையில் டிஜிபியை நியமிக்க தவறிய தமிழ்நாடு அரசு மீது அவமதிப்பு நடவடிக்கை கோரி கிஷோர் கிருஷ்ணசாமி என்பவரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் 3 வாரத்தில் தமிழ்நாடு அரசு பதில் தர நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. ஹென்றி திபேன் வழக்கில், யுபிஎஸ்சி பரிந்துரையில் டிஜிபியை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  • தோண்டி எடுக்கப்பட்ட  குழந்தையின் உடல்
    7 Nov 2025 3:45 PM IST

    தோண்டி எடுக்கப்பட்ட குழந்தையின் உடல்

    ஒசூர் அருகே உள்ள சின்னட்டி கிராமத்தில் ஓரினச்சேர்க்கை பிரச்சனையில் 6 மாத குழந்தையை தாய் கொலை செய்த சம்பவத்தில் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

  • நடிகையிடம் தவறான கேள்வி: நடிகர் சங்கம் கண்டனம்
    7 Nov 2025 3:44 PM IST

    நடிகையிடம் தவறான கேள்வி: நடிகர் சங்கம் கண்டனம்

    திரை துறையினர் பற்றி அவதூறு பரப்பி பார்வையாளர்களை பெற்றுவிடலாம் என்ற மோசமான போக்கு நிலவுகிறது. பத்திரிகையாளர் என்ற போர்வையில் நடிகைகளை பார்த்து ஏளனமாக கேள்வி கேட்பது கவலை தருகிறது. நடிகை கவுரி கிஷனுக்கு நடந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். எதிர்க்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு முன்னெடுப்புகளை தொடங்குவோம் என நடிகர் சங்கம் கூறியுள்ளது.

  • மசோதாக்களுக்கு ஒப்புதல் தர தாமதம் என்பது தவறு; கவர்னர் மாளிகை விளக்கம்
    7 Nov 2025 2:48 PM IST

    மசோதாக்களுக்கு ஒப்புதல் தர தாமதம் என்பது தவறு; கவர்னர் மாளிகை விளக்கம்

    மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் என எழுந்த குற்றச்சாட்டிற்கு கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

    இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

    சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கவர்னர் தாமதம் செய்வதாக கூறுவது ஆதாரமற்றது. கவர்னரின் நடவடிக்கைகள் தமிழக மக்களின் நலனுக்கு எதிரானவை என்பது உண்மைக்கு புறம்பானது. 2025 அக்டோபர் 31 வரை பெறப்பட்ட மொத்த மசோதாக்களில் 81 சதவீதத்திற்கு கவர்னர் ஒப்புதல் தந்துள்ளார். 13 சதவீதம் மசோதாக்கள் ஜனாதிபதியின் பரிசீலனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story