இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-02-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 12 Feb 2025 11:19 AM IST
பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர், பிரான்சின் பாரீஸ் நகரில் நடைபெற்ற ஏ.ஐ. உச்சி மாநாட்டில், அந்நாட்டு அதிபர் மேக்ரானுடன் ஒன்றாக பங்கேற்றார்.
இதன்பின்னர் இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி உரையாடினார். இதேபோன்று, பாரீஸ் நகரில் நடந்த தலைமை செயல் அதிகாரிகளுக்கான மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, பிரான்ஸ் உடனான வலுவான நட்புறவு மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புகளை விரிவுப்படுத்தி இருப்பது ஆகியவற்றை பற்றி பேசினார். இதன்பின்னர், கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை பிரதமர் மோடி இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
- 12 Feb 2025 11:12 AM IST
நாகை-காங்கேசன் துறைமுகம் இடையே இன்று முதல் பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் கப்பல் சேவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
- 12 Feb 2025 11:01 AM IST
தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகங்களை வரும் 24-ந்தேதி, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னையில் கொளத்தூர், தி.நகர், ஆழ்வார்பேட்டை உள்பட 33 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படுகின்றன.
- 12 Feb 2025 10:56 AM IST
திருவண்ணாமலையில் தை மாத பௌர்ணமி கிரிவலம் முடித்து சொந்த ஊர்களுக்கு செல்ல பக்தர்கள் திரண்டனர். ஒரே நாளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலத்தில் பங்கேற்றனர். இதனால் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பும்போது, ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. விழுப்புரம்-வேலூர் செல்லும் ரெயிலில் குவிந்த பக்தர்களால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது.
- 12 Feb 2025 10:44 AM IST
அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீது சென்னை ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.
- 12 Feb 2025 10:36 AM IST
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு கால பூஜைகள் முடிந்த நிலையில் கடந்த மாதம் 20-ந்தேதி காலை கோவில் திரு நடை அடைக்கப்பட்டது. இந்த நிலையில் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் திரு நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டர் பிரம்மதத்தர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். இன்று முதல் வருகிற 17-ம் தேதி வரை 5 நாட்கள் சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும்
நாளை (பிப்ரவரி 13) முதல் வருகிற 17-ம் தேதி வரை தினமும் உதயாஸ்தமய பூஜை, படிபூஜை, களபாபிஷேகம் நடக்கிறது. நாளை காலை 5:30 மணி முதல் 11:30 மணி வரை நெய் அபிஷேகமும், 16-ம் தேதி மாலை சஹஸ்ர கலச பூஜையும், 17-ம் தேதி சஹஸ்ர கலசாபிஷேகமும் நடக்கிறது.
- 12 Feb 2025 10:29 AM IST
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.63,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.7,940-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8,060-க்கும், ஒரு சவரன் ரூ.64,480-க்கும் விற்பனை ஆனது.
இதன் மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத புதிய உச்சம் தொட்டது. கடந்த 20 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.535-ம், சவரனுக்கு ரூ.4,280-ம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
- 12 Feb 2025 10:02 AM IST
பிரதமர் மோடி பாரீஸ் நகரில் நடந்த தலைமை செயல் அதிகாரிகளுக்கான மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, பிரான்ஸ் உடனான வலுவான நட்புறவு மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புகளை விரிவுப்படுத்தி இருப்பது ஆகியவற்றை பற்றி பேசினார்.
இந்த பேச்சின்போது, இந்தியாவின் நிலையான கொள்கைகள், உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் தொழில் நுட்பம், விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளில் நவீனத்துவம் ஆகியவற்றையும் வலியுறுத்தி பேசினார்.
- 12 Feb 2025 9:35 AM IST
கள்ளக்குறிச்சிக்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டையில் தந்தை, தாய் மற்றும் மகன் என 3 பேர் மர்ம மரணம் அடைந்துள்ளனர். இதில், தந்தையின் உடல் மரத்தில் தொங்கியபடி காணப்பட்டது. தாய் மற்றும் மகன் ஆகியோரது உடல்கள் அஜீஸ் நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள குளம் ஒன்றில் மிதந்தன. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.







