இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 12 Nov 2025 4:42 PM IST
குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் நடந்த துயரம் - 11 மாதக் குழந்தை உயிரிழப்பு
தூத்துக்குடி அருகே குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்வில் நடந்த துயரம். வீட்டின் மேற்கூரைப் பூச்சு இடிந்து விழுந்ததில், விழாவுக்கு வந்த எதிர்வீட்டைச் சேர்ந்த பெண்ணின் 11 மாதக் குழந்தை உயிரிழந்தது. உயிரிழந்த குழந்தையின் தாயார் ராதா மகேஸ்வரியும் (தலையில் பலத்த காயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- 12 Nov 2025 4:39 PM IST
அண்டை மாநிலங்களில் சாலை வரி தனியாக விதிக்கப்படுவதைக் கண்டித்து, தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தால் வாழ்வாதாரம் இழந்து இருப்பதால் இப்பிரச்னைக்கு தீர்வு காண முதல்-அமைச்சரிடம் கோவை ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
- 12 Nov 2025 3:22 PM IST
சீனாவில் திடீரென இடிந்து விழுந்த புதிதாக திறக்கப்பட்ட பாலம்
சீனாவின் தென்மேற்குப் பகுதியில் சமீபத்தில் திறக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவையும் திபெத்தையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்ட 758 மீட்டர் நீளம்கொண்ட இந்த பாலம், மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- 12 Nov 2025 3:20 PM IST
டெல்லி கார் வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு பிரதமர் மோடி நேரில் ஆறுதல்
பூடான் பயணத்தை முடித்த பின்பு நாடு திரும்பிய பிரதமர் மோடி, டெல்லி கார் வெடிப்பில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கடந்த 10-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
- 12 Nov 2025 3:14 PM IST
நெல்லை அருகே ரேபிஸ் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தெரு நாய் கடித்ததில் ரேபிஸ் தாக்கி, 2 குழந்தைகளுக்கு தந்தையான தொழிலாளி உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன் ஐயப்பனை (30) நாய் கடித்த நிலையில், காயத்தை சரியாக கவனிக்காமல் விட்டதாக கூறப்படுகிறது. உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரேபிஸ் உறுதியாக, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- 12 Nov 2025 2:32 PM IST
ஒரே கப்பலில் 103 காற்றாலை இறக்கைகளை கையாண்டு புதிய சாதனை
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ஒரே கப்பலில் 103 காற்றாலை இறக்கைகளை வெற்றிகரமாகக் கையாண்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி,101 இறக்கைகள் கப்பலில் ஏற்றுமதி செய்யப்பட்டது என்ற முந்தைய சாதனையை முறியடிக்கும் வகையில் நேற்று 103 இறக்கைகள் கப்பலில் இருந்து பாதுகாப்பாக கையாளப்பட்டுள்ளன.
நடப்பு நிதியாண்டில் அக்டோபர் மாதம் வரை மொத்தம் 2300 காற்றாலை இறக்கைகள் இத்துறைமுகத்தில் கையாளப்பட்டுள்ளன. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் 61% அதிகம் ஆகும்
- 12 Nov 2025 2:30 PM IST
கும்கி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை
இயக்குநர் பிரபுசாலமன் தயாரித்து இயக்கிய கும்கி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது சென்னை ஐகோர்ட்டு. கும்கி 2 படத்தை தயாரிக்க 2018ம் ஆண்டு வாங்கிய ரூ.1.5 கோடி கடனை பட வெளியீட்டுக்கு முன்பு தருவதாக ஒப்பந்தம் செய்த நிலையில், பணத்தை தராததால் வெளியிட தடைகோரி சந்திரபிரகாஷ் ஜெயின் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
- 12 Nov 2025 1:48 PM IST
டெல்லி கார் குண்டு வெடிப்பு: 2 கார்களை தேடும் பணி தீவிரம்
டெல்லியில் கார் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் மேலும் இரண்டு கார்களை தேடும் பணியில் டெல்லி காவல்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் தீவிரம் காட்டி வருகின்றன.அரியானா மாநில பதிவெண் கொண்ட காரை ஜம்மு காஷ்மீரை சேர்ந்த மருத்துவருக்கு விற்றவர் கைதானார். கைதானவர் அளித்த வாக்குமூலத்தின்படி ஒரு கார் மட்டுமின்றி மேலும் இரண்டு கார்களை வாங்கியது அம்பலமாகியுள்ளது.
- 12 Nov 2025 1:45 PM IST
யு.பி.எஸ்.சி. பிரதானத் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழ்நாடு மாணவர்கள் அசத்தல்
தமிழ்நாடு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட 13.97% அதிகரித்துள்ளது.
- 12 Nov 2025 1:18 PM IST
சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் 13.11.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

















