இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-01-2025
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 13 Jan 2025 8:41 AM IST (Updated: 13 Jan 2025 9:30 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 13 Jan 2025 4:41 PM IST

    பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்

    பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் 16-ம்தேதி வரை ஞாயிறு/விடுமுறை நேர அட்டவணையின்படியும், 17-ம்தேதி சனிக்கிழமை அட்டவணையின்படியும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 13 Jan 2025 4:29 PM IST

    குரோஷியா ஜனாதிபதியாக ஜோரன் மிலனோவிக் மீண்டும் தேர்வாகிறார்: கருத்துக் கணிப்பு

    குரோஷியாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோரன் மிலனோவிக் வெற்றி பெறுவார் என, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. ஜோரன் மிலனோவிக் 78 சதவீத வாக்குகளும், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளர் டராகன் பிரைமோரக் 22 சதவீத வாக்குகளும் பெறுவார்கள் என இப்சோஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் இன்று இரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 13 Jan 2025 4:19 PM IST

    உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் தீவிரமடைந்து வரும் சூழலில், ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரிய வீரர்கள் சண்டையிட்டு வருகின்றனர். இந்நிலையில், ரஷிய போரில் சிறை பிடிக்கப்பட்டு உள்ள 2 வடகொரிய வீரர்களை விடுவிக்க தயாராக இருக்கிறோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

    எனினும், அவர்கள் இருவருக்கு பதிலாக, உக்ரைனிய கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

  • 13 Jan 2025 4:00 PM IST

    நடப்பு ஆண்டில் 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. 2025-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் கூறும்போது, 2023-ம் ஆண்டு நடந்த ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் நானும் கே.எல். ராகுலும் முக்கிய பங்காற்றினோம்.

    ஆனால் நாங்கள் நினைத்தது போல் முடிவு கிடைக்கவில்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் நான் இடம்பெற்றால் அது பெருமையான தருணமாக இருக்கும் என ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.

  • 13 Jan 2025 3:24 PM IST

    மகா கும்பமேளாவின் மூலம் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும்

    உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இன்று தொடங்கி உள்ள மகா கும்பமேளாவில் முதல் நாளில் மட்டும் 50 லட்சம் பேர் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 45 நாட்கள் நடைபெறும் இந்த மகா கும்பமேளாவின்மூலம் ரூ.2 லட்சம் கோடி வரை வருவாய் ஈட்டப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

    அதாவது, கும்பமேளாவுக்காக உத்தர பிரதேசம் வரும் ஒவ்வொருவரும் தலா 5000 ரூபாய் செலவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு செலவு செய்தால் உத்தர பிரதேச அரசின் வருவாய் 2 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் செய்யும் செலவு அதைவிட அதிகமாக இருந்தால் வருவாய் மேலும் அதிகரிக்கும். 

  • 13 Jan 2025 3:10 PM IST

    தமிழக எல்லையை ஒட்டிய கேரள மாவட்டங்களில் விடுமுறை

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதன்படி, கேரளாவின் கொல்லம், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

  • 13 Jan 2025 2:25 PM IST

    உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டம், சவுதாசி நகரில் 51 அடி உயர ராமர் சிலை அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த சிலையை அடுத்த மாதம், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • 13 Jan 2025 2:18 PM IST

    சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

    1984-ம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை வழக்கிற்கான விசாரணைக்கு ஆஜராவதற்காக டெல்லியில் உள்ள ரவுஸ் அவென்யூ கோர்ட்டிற்கு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெகதீஷ் டைட்லர் வருகை தந்துள்ளார். இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை வருகிற 28-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

  • 13 Jan 2025 1:54 PM IST

    ஜெயலலிதாவின் சொத்துகளை தீபாவிடம் ஒப்படைக்க முடியாது. ஜெயலலிதாவின் சொத்துகளை ஒப்படைக்க கோரி தீபா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து கர்நாடகா ஐகோர்ட்டு கூறியுள்ளது.

  • 13 Jan 2025 1:36 PM IST

    தமிழகத்தின் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story