இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...14-05-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 14 May 2025 2:23 PM IST
நெல்லை டவுன் பகுதியில் உள்ள தனியார் பைக் ஷோரூம் வாசலில் பெட்ரோல் குண்டை வீசி சென்ற இளைஞர்கள் குறித்து போலீசார் சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னீர்பள்ளம் பகுதியில் திமுக கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், பைக் ஷோரூம் வாசலிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 14 May 2025 2:09 PM IST
தமிழகத்தில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி,தேனி, திண்டுக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சுமார் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் தமிழகத்தில் மே 16-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 14 May 2025 1:55 PM IST
கோவை மாநகரில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் போக்குவரத்துக் காவலர்களுக்கு பேட்டரி பேன் வசதி கொண்ட ஹெல்மெட் வழங்கினார் காவல் ஆணையர் ஏ. சரவண சுந்தர் . முதற்கட்டமாக தலா ரூ.15,000 மதிப்புகொண்ட இந்த ஹெல்மெட் 36 போக்குவரத்துக் காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- 14 May 2025 1:53 PM IST
தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சுமார் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் தமிழகத்தில் மே 16-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 14 May 2025 1:24 PM IST
சீனாவின் ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம்
சீனாவை சேர்ந்த குளோபல் டைம்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் கணக்கை முடக்கியது மத்திய அரசு. சீன அரசு ஆதரவு ஊடகமான எக்ஸ். எச். நியூஸ் நிறுவனம், துருக்கியைச் சேர்ந்த டி.ஆர்.டி வோர்ல்டு நிறுவனத்தின் எக்ஸ் தள கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உடனான மோதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக தவறான தகவல்களை பரப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 14 May 2025 12:35 PM IST
ஜனாதிபதியுடன் முப்படை தளபதிகள் சந்திப்பு
பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக்கூட்டத்திற்கு பிறகு ஜனாதிபதி திரவுபதி முர்முவை முப்படை தளபதிகள் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 14 May 2025 12:31 PM IST
நீலகிரி, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் உள்ள , எம்.ஆர்.ஐ, சி.டி, ஸ்கேன் மையம், அறுவை சிகிச்சை பிரிவை ஆய்வு செய்தார்.
- 14 May 2025 12:14 PM IST
ஞானசேகரன் மீது மற்றொரு பாலியல் வழக்குப்பதிவு
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது மற்றொரு பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதிய வழக்கு தொடர்பாக ஞானசேகரனை 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
- 14 May 2025 11:38 AM IST
இந்திய ராணுவ வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்
இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பூர்ணம் குமார் ஷா இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். இந்திய - பாகிஸ்தான் எல்லை பகுதியான அட்டாரி வழியாக வீரரை பாகிஸ்தான் ஒப்படைத்தது.20 நாட்களுக்கு பிறகு இந்திய ராணுவ வீரர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
- 14 May 2025 10:24 AM IST
ஜம்மு காஷ்மீரில் 11 இடங்களில் சோதனை
ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் சந்தேகத்திற்கிடமான 11 இடங்களில் பல்வேறு அமைப்பினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாத வலையமைப்பு தொடர்பான முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப்படை, காவல்துறை, மாநில புலனாய்வு அமைப்பு உள்ளிட்ட அமைப்பினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று முதல் நடைபெற்று வந்த சோதனையில் மின்னணு சாதனங்கள் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைக்கு உதவியதாக 150 சந்தேக நபர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.










