இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...15-05-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 15 May 2025 10:36 AM IST
ஐ.பி.எல் தொடர் மீண்டும் தொடங்கும் நிலையில், நாடு திரும்பிய வீரர்களுக்கு பதிலாக புதிய வீரர்களை சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிதாக சேர்க்கப்படும் வீரர்களை 2026ஆம் ஆண்டு சீசனில் தக்க வைக்க முடியாது என தகவல் வெளியாகி உள்ளது.
- 15 May 2025 10:34 AM IST
பொறியியல் படிப்பில் சேர 8 நாட்களில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போட்டிப்போட்டு விண்ணப்பிப்பதால், விண்ணப்பப் பதிவு 2 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 15 May 2025 10:31 AM IST
ராணிப்பேட்டை அருகே ஒரே இரவில் மாமியார் உள்பட 3 பேரை அடித்துக் கொன்ற இளைஞர். போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்ற இளைஞர் பாலுவுக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.
- 15 May 2025 10:27 AM IST
தேனி: நேற்றிரவு டி.கள்ளிப்பட்டி அருகே திண்டுக்கல் பைபாஸ் சாலையைக் கடந்த தொழு மாடுகள் மீது அரசுப் பஸ் மோதிய விபத்தில் 18 மாடுகள் உயிரிழந்தது. 20க்கும் மேற்பட்ட மாடுகள் காயம் அடைந்தது.
தேவாரம் பகுதியைச் சேர்ந்த சுருளிச்சாமி, நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு இன மாடுகளை உரத்திற்காக தோட்டங்களில் தொழுவம் அமைத்து மேய்ச்சல் செய்து வருகிறார். அரசுப் பேருந்து ஓட்டுநரான அழகர்சாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- 15 May 2025 10:24 AM IST
தமிழகத்தில் குற்றங்கள் கடந்தாண்டைவிட 52 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் தினமும் கொலை, பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுகின்றன. குற்றங்கள் அதிகரிக்க மது பழக்க வழக்கமே காரணம். அரசு இதில் கவனம் செலுத்துவதில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
- 15 May 2025 9:39 AM IST
மெக்சிகோவின் ஜாலிஸ்கோவில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் 23 வயதான வலேரியா மார்க்வெஸ் டிக்டாக்கில் லைவ் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் அவரை பலமுறை சுட்டார். இதில் படுகாயமடைந்த வலேரியா சரிந்து விழுந்து உயிரிழந்தார். பின்னர் பெண் ஒருவர் அந்த லைவை கட் செய்தார். அப்போது அந்த பெண்ணின் முகம் வீடியோவில் பதிவானது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 15 May 2025 9:38 AM IST
காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 84 பேர் உயிரிழந்தனர். அகதிகள் முகாம், மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.
- 15 May 2025 9:36 AM IST
ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,560 குறைந்து ரூ.68,880க்கு விற்பனை ஆகிறது.
- 15 May 2025 9:34 AM IST
சென்னை வேளச்சேரி காந்தி சாலையில் மின் கசிவு காரணமாக டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்த நிலையில், அருகே நிறுத்தப்பட்ட இரு பைக்குகள் தீயில் எரிந்து நாசமாகின. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேளச்சேரி தீயணைப்புத் துறையினர், தீ பரவாமல் தடுத்தனர்.
- 15 May 2025 9:34 AM IST
2021 வேலூர் ஜாய் ஆலுக்காஸ் நகைக் கடையில் 15 கிலோ தங்கம் கொள்ளை வழக்கில், 2023ம் ஆண்டில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட டிக்காராம், சென்னையில் நகைத்திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்தாண்டு ஜாமினில் வெளியேவந்தவர் கட்டட வேலைகளில் ஈடுபட்டுவந்த நிலையில், குரோம்பேட்டையில் கடந்த 6ம் தேதி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 10 சவரன் நகை திருட்டு வழக்கில் கைதாகியுள்ளார்.











