இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-10-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 16 Oct 2025 7:26 PM IST
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
சட்டம் இயற்றும் அதிகாரம் முழுக்க முழுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கே சொந்தம்! தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவு தொடர்பாக ஆளுநர் அனுப்பியுள்ள செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பேரவையின் மாண்பைக் குறைக்ககூடிய வார்த்தை அடங்கிய பகுதிகளைத் தமிழ்நாடு சட்டப்பேரவை நிராகரித்தது” என்று தெரிவித்துள்ளார்.
- 16 Oct 2025 6:05 PM IST
கடலூரில் மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு
கடலூர்,
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராமத்தில் மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் உயிரிழந்தனர். விவசாய நிலத்திற்கு களை எடுக்கும் போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே 4 பெண்களும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பெண்கள் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- 16 Oct 2025 5:37 PM IST
பீகார் சட்டசபை தேர்தலில் ஆளும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 101 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்த கட்சி 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை நேற்று வெளியிட்டது. இந்த நிலையில் எஞ்சிய 44 தொகுதிக்கும் வேட்பாளர் பட்டியலை ஐக்கிய ஜனதா தளம் இன்று அறிவித்தது.
ஷீலா மண்டல், விஜேந்திர பிரசாத் யாதவ், லேஷி சிங், ஜெயந்த்ராஜ், முகமது ஜமாகான் உள்ளிட்ட மந்திரிகள் இடம் பெற்றுள்ளனர். அந்த கூட்டணியில் பா.ஜனதா ஏற்கனவே போட்டியிடும் அனைத்து தொகுதிகளுக்கான (101) வேட்பாளர்களை அறிவித்து இருந்தது. தற்போது ஐக்கிய ஜனதா தளமும் 101 ெதாகுதிக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.
- 16 Oct 2025 4:01 PM IST
தீபாவளிக்கு சிறப்பு ரயில்
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதிக்காக இரண்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இரண்டு ரயில்களும் நாளை இயக்கப்படுகின்றன. சென்னை தாம்பரத்தில் இருந்து இரவு 7.30மணிக்கு கிளம்பும் இந்த ரயில், செங்கோட்டைக்கு மறுநாள் காலை 7.30 மணிக்கு சென்றடையும். அதேபோல மதுரைக்கு எழும்பூரில் இருந்து இரவு 11.45 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் மறுநாள் காலை சனிக்கிழமை 10.15 மணிக்கு மதுரை சென்றடையும்.
- 16 Oct 2025 3:48 PM IST
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் அமுதா தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: ” தமிழகம் புதுவையில் அடுத்த 3 நாட்கள் மழை பெய்யக்கூடும். தமிழத்தில் அக்டோபர் 1 முதல் 16 ஆம் தேதி வரை இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளது. வரும் 18 ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது” என்றார்.
- 16 Oct 2025 3:22 PM IST
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கமாட்டேன் என மோடி உறுதி அளித்ததாக டிரம்ப் கருத்துக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. "கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியர்களின் நலனே முக்கியம் என்று தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சகம், கச்சா எண்ணெய் இறக்குமதி கொள்கை இந்தியாவின் நலன் சார்ந்தது. நிலையான விலை, விநியோக உறுதியே இந்தியாவின் நோக்கம் என்று தெரிவித்துள்ளது.
- 16 Oct 2025 1:56 PM IST
கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்
கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
- 16 Oct 2025 1:55 PM IST
இந்த வார ஓடிடி ரிலீஸ்!.. எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன.
திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
- 16 Oct 2025 1:40 PM IST
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
62 ஆயிரம் பேர் வசிக்க கூடிய அபிபுரா நகரில் இருந்து 200 கி.மீ. தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்துள்ளது.
- 16 Oct 2025 1:22 PM IST
மாதம்பட்டி ரங்கராஜிடம் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற விசாரணை நிறைவு
மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜிடம் மாநில மகளிர் ஆணையத்தில் இன்று இரண்டரை மணி நேரம் விசாரணை நடைபெற்று வந்தநிலையில், தற்போது விசாரணை நிறைவடைந்துள்ளது.மகளிர் ஆணையத்தில் ஜாய் கிரிசில்டாவிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
















