இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-11-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 17 Nov 2025 12:43 PM IST
சேலத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசியுள்ளார். சேலத்தில் உள்ள ஈபிஎஸ் இல்லத்தில் இந்த சந்திப்பானது நடந்துள்ளது. தேர்தல் தொடர்பாகவும், கூட்டணி தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜி.கே.வாசனுடன் அவரது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- 17 Nov 2025 12:39 PM IST
கான்பூரில் உள்ள நேஷனல் சுகர் இன்ஸ்டியூட் நிறுவனம் வழங்கும் படிப்புகளும் அவற்றின் விவரங்களும்...
1920 ஆம் ஆண்டு இந்தியாவில் சர்க்கரை உற்பத்தியை பெருக்க பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் முயற்சிகளை மேற்கொண்டது. அதன்பின்னர், தொடர்ச்சியாக சர்க்கரை தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு செயல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
“இம்பீரியல் இன்ஸ்டியூட் ஆப் சுகர் டெக்னாலஜி” என்னும் நிறுவனம் 1936 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்னர், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு, 1947 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் "இம்பீரியல் இன்ஸ்டியூட் ஆப் சுகர் டெக்னாலஜி"என்னும் பெயர் மாற்றப்பட்டு, "இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சுகர் டெக்னாலஜி" (IIST) என்று அழைக்கப்பட்டது.
- 17 Nov 2025 12:07 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் சாமி தரிசனம்
கோவிலுக்குள் சென்ற சங்கராச்சாரியார் மூலவர் ஏழுமலையானுக்கு ‘வெண்சாமர’ சேவை (விசிறி கைங்கர்யம்) செய்தார். சங்கராச்சாரியாருக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம் வழங்கினா்.
சாமி தரிசனத்தின்போது தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி, கோவில் துணை அதிகாரி லோகநாதன், பார்பதீடர் ராமகிருஷ்ணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- 17 Nov 2025 11:50 AM IST
குற்றாலத்தில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்.. அருவிகளில் நீராடி விரதம் தொடங்கினர்
தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமாகவும் ஆன்மிக பகுதியாகவும் விளங்கிவரும் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் இன்று அதிகாலை முதலே அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
அந்த வகையில் தற்போது அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியுள்ள நிலையில், முதல் நாளிலிலேயே ஏராளமான அய்யப்ப பக்தர்கள் குற்றால அருவிகளுக்கு வருகை தந்து புனித நீராடி மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கியுள்ளனர். அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரித்திருப்பதால் அருவி கரைகளில் உள்ள கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
- 17 Nov 2025 11:28 AM IST
சவுதி அரேபியாவில் உயிரிழந்த 42 இந்தியர்கள் - ராமதாஸ் இரங்கல்
சவுதியில் நடந்த சாலை விபத்தில் பேருந்தும், டீசல் லாரியும் மோதி தீப்பிடித்ததில் 42 இஸ்லாமியர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அரசு உடனடியாக இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள், உடன் சென்ற அனைவரையும் மீட்டு இந்தியாவுக்கு பத்திரமாக கொண்டு வருவதுடன், அவர்களுக்கான நிவாரண உதவிகளை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- 17 Nov 2025 11:09 AM IST
பூண்டி ஏரியில் நீர் திறப்பு உயர்வு
பூண்டி ஏரியில் இருந்து நீர்திறப்பு 2,500 கன அடியில் இருந்து 3,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது
ஏரியின் நீர்மட்டம் 32.5 அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 790 கனஅடியாக உள்ளது
- 17 Nov 2025 10:54 AM IST
14 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 17 Nov 2025 10:39 AM IST
சவுதி அரேபியாவில் பஸ் விபத்து; 42 இந்தியர்கள் பலி
சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் இருந்து மெதினா நோக்கி உம்ரா புனித பயணம் மேற்கொள்வோர் பஸ் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அந்த பஸ்சில் 43 பேர் பயணித்தனர். அப்போது அந்த் பஸ் இன்று அதிகாலை 1.30 மணியளவில் முப்ரிஹத் பகுதியருகே சென்றபோது, டீசல் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது.
இதில், பஸ்சில் இருந்த 20 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட 42 உம்ரா பயணிகள் பலத்த காயமடைந்து உயிரிழந்து உள்ளனர். அவர்களில் பலர் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சென்றவர்கள் என முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றது. இந்த விபத்தில் ஒரே ஒருவர் உயிர் தப்பியுள்ளார்.
- 17 Nov 2025 10:16 AM IST
டிகிரி முடிச்சிருக்கீங்களா?: பேங்க் ஆப் பரோடாவில் வேலை.. 2,700 பணியிடங்கள்
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடாவில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள வங்கி கிளைகளில் சேர்த்து மொத்தம் 2,700 பணியிடங்களும் தமிழகத்தில் மட்டும் 159 இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
- 17 Nov 2025 10:02 AM IST
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வெளியான முக்கிய தகவல்
இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று காலை 8.30 மணியளவில் அதே பகுதிகளில் நிலவியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் மெதுவாக நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதேபோன்று, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதே போன்று, தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை (செவ்வாய்க்கிழமை) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
















