இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-04-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 19 April 2025 12:48 PM IST
நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் கைது
சென்னை ஆலந்தூர் அருகே நடிகர் பாபி சிம்ஹாவின் கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பெண் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். கார் மோதியதில் 6-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்தன. இந்த சம்பவத்தில், நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் விபத்து ஏற்படுத்தியதற்காக, கைது செய்யப்பட்டு உள்ளார். காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- 19 April 2025 11:49 AM IST
பா.ம.க.வை தொடர்ந்து ம.தி.மு.க.விலும் உட்கட்சி பூசல் ஏற்பட்டு உள்ளது. மல்லை சத்யாவுடன் துரை வைகோவுக்கு மோதல் போக்கு இருந்து வந்தது. இந்நிலையில், ம.தி.மு.க. முதன்மை செயலர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகியுள்ளார்.
அக்கட்சியின் நிர்வாக குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், அவர் பதவி விலகியுள்ளது கட்சியினரிடையே பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
- 19 April 2025 11:41 AM IST
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதற்றத்தில் இருக்கிறார் என கூறிய தெலுங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், இந்திய வரலாற்றில் 2 முறை கலைக்கப்பட்டது தி.மு.க ஆட்சிதான்.
பா.ஜ.க கூட்டணியில் குழப்பம் இல்லை, பலமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
- 19 April 2025 10:40 AM IST
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை, டெல்லி சென்றுள்ள தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேரில் சந்தித்து பேசினார்.
- 19 April 2025 10:35 AM IST
சென்னை குன்றத்தூரில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து வருகிறார். அவர்களிடம் இருந்து, மனுக்களையும் பெற்று வருகிறார். அவரை வரவேற்பதற்காக மக்கள் சாலையின் இரு ஓரத்திலும் திரண்டிருந்தனர்.
அவர்களிடம், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கைகுலுக்கி, வாழ்த்துகளையும், அன்பையும் பரிமாறி கொண்டார்.
- 19 April 2025 10:33 AM IST
அடுத்த 7 நாட்கள் - வானிலை மையம் முக்கிய அலர்ட்
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதேபோல் வருகிற 22-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது.
- 19 April 2025 10:30 AM IST
இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத் நகரில் அடுத்த மாதம் 10-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை இந்த ஆண்டுக்கான 'மிஸ் வேர்ல்ட்' உலக அழகி போட்டி நடைபெறவுள்ளது. இதில் 140 நாடுகளை சேர்ந்த அழகிகளும், உலகெங்கிலும் இருந்து பத்திரிகையாளர்கள் மற்றும் பிற பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர்.
இதன் பிரமாண்டமான இறுதி போட்டி மே 31 அன்று ஹைடெக்ஸ் நகரில் நடைபெற உள்ளது.
- 19 April 2025 9:59 AM IST
பத்திரிகை உலகில் வியக்கத்தக்க வகையில் பல்வேறு சாதனைகள் படைத்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார். அவரது 12-வது நினைவு தினத்தையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் இன்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் கல்வி, பத்திரிகை, விளையாட்டு, ஆன்மிகம் மற்றும் சமூக சேவைகளை நினைவு கூர்ந்து போற்றும் வகையில் அனைவரும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
- 19 April 2025 9:58 AM IST
டெல்லியின் முஸ்தாபாபாத் பகுதியில் 4 தளங்களை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்ததில் பலர் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடந்தது. எனினும், கட்டிட விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 14 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.
தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. 8 முதல் 10 பேர் வரை இடிபாடுகளில் சிக்கி உள்ளனர்.