இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 23-04-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 23 April 2025 12:53 PM IST
அதிகாரப் போட்டியில் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தவில்லை - கவர்னர் மாளிகை விளக்கம்
கல்வி வளர்ச்சி, கல்விக்கான திட்டமிடுதல் போன்றவற்றிற்காகவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்றும், இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை கடந்த ஜனவரி மாதமே தொடங்கிவிட்டோம் என்றும், சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை இந்த மாநாட்டுடன் முடிச்சு போட்டு தவறான தகவல்களை சிலர் பரப்புகின்றனர் என்றும் கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.
- 23 April 2025 11:50 AM IST
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: உயிரிழந்தோரில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை என தகவல்
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோரில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும், இருவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும், ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளார் என்றும், பாதிக்கப்பட்டோருடன் டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு அதிகாரிகள் பேசி உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- 23 April 2025 11:46 AM IST
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: காஷ்மீர் முதல்-மந்திரி
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா கடுமையாகக் கண்டித்துள்ளார். இது ஒரு அருவருப்பான, மிக மோசமான மனிதாபிமானமற்ற செயல் என்றும், சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்களை நோக்கி நடத்தப்பட்ட எந்தத் தாக்குதலையும் விட மிகப் பெரியது என்றும் அவர் கூறி இருந்தார்.
இந்நிலையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயம் அடைந்தோருக்கு ரூ.2 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரு.1 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.
- 23 April 2025 11:16 AM IST
நண்பகல் 12 மணிக்கு கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிசூடு சம்பவத்தைத் தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்ட நடைபெறுகிறது.
பிரதமர் இல்லத்தில் நடக்கும் கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 23 April 2025 11:12 AM IST
சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ - தமிழ்நாடு அரசு ஒப்புதல்
சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையான 15.46 கி.மீ தொலைவு மெட்ரோ ரெயில் வழித்தட விரிவாக்கத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. மத்திய அரசின் ஒப்புதலுக்காக இவை அனுப்பி வைக்கப்பட்டு, அனுமதிக்கு பிறகு இந்த வழித்தடத்திற்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
- 23 April 2025 11:01 AM IST
பஹல்காம்: துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அமித் ஷா அஞ்சலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா அஞ்சலி செலுத்தினார்.
ஸ்ரீநகரில் இருந்து அனைவரின் உடல்களும் விமானம் மூலமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
- 23 April 2025 10:45 AM IST
டாஸ்மாக் விவகாரம்: அமலாக்கத்துறை சோதனை சட்ட விரோதம் இல்லை - சென்னை ஐகோர்ட்டு
அமலாக்கத்துறை சோதனை சட்ட விரோதம் இல்லை என்று கூறிய சென்னை ஐகோர்ட்டு, அமலாக்கத்துறைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
- 23 April 2025 9:28 AM IST
பஹல்காம் பகுதியில் 4 முதல் 6 பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக தகவல்
பஹல்காம் பகுதியில் இன்னும் 4 முதல் 6 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலைப்பகுதியில் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளதால் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு உள்துறை மந்திரி அமித் ஷா அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 23 April 2025 9:15 AM IST
ஜம்மு காஷ்மீர் தாக்குதல்.. பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவம் தேடுதல் வேட்டை
பயங்கரவாத தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும் ராணுவம், மத்திய ஆயுதப்படை மற்றும் போலீசார் சம்பவ இடம் நோக்கி விரைந்தனர். அவர்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுன்ட்டர் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் பயங்கரவாதிகளை பிடிக்க டிரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.















