இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-05-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 25 May 2025 3:20 PM IST
ரவிமோகன் விவகாரம்: கெனிஷா எச்சரிக்கை
ரவிமோகன் விவகாரத்தில் தன்னை பற்றி அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என பாடகி கெனிஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். பாலியல் வல்லுறவு மிரட்டல் மற்றும் ஆபாசமாக வசைபாடியவர்கள், கொலை மிரட்டல் விடுவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கெனிஷாவின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
- 25 May 2025 3:12 PM IST
கோவை, நீலகிரியில் அதி கனமழைக்கு வாய்ப்பு
“கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (மே 25) கன முதல் அதி கன மழை” உள்ளதாகவும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- 25 May 2025 3:07 PM IST
ஐ.பி.எல்.2025: டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு
டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி குஜராத் அணி பந்துவீச உள்ளது.
- 25 May 2025 2:09 PM IST
ஊட்டியில் மரம் முறிந்து விழுந்து சிறுவன் பலி
நீலகிரி மாவட்டம் உதகையில் மரம் முறிந்து விழுந்து, கேரளாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கனமழை பெய்தபோது வீசிய பலத்த காற்றில் மரம் முறிந்து விழுந்துள்ளது. கேரளாவில் இருந்து குடும்பத்துடன் உதகைக்கு சுற்றுலா வந்தபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
- 25 May 2025 1:54 PM IST
ஞானசேகரன் வழக்கில் 28இல் தீர்ப்பு
சென்னை அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கைதான ஞானசேகரன் வழக்கில் மே 28இல் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ஞானசேகரன் வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் மே 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கவுள்ளது.
- 25 May 2025 1:52 PM IST
கோவை மழை - 5 வீடுகள் சேதம், 2 பேர் காயம்: முத்துசாமி
கோவையில் பெய்து வரும் மழையால் இதுவரை 5 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. 2 பேருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது. முன்னேற்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மழையால் ஏற்பட்ட சேதங்களை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். இழப்பீடு வழங்குவது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.
- 25 May 2025 1:49 PM IST
திருவண்ணாமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- 25 May 2025 1:46 PM IST
மூழ்கத்தொடங்கியது சரக்கு கப்பல்
அரபிக்கடலில் கவிழ்ந்த சரக்கு கப்பலில் இருந்து அனைத்து ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், கப்பல் மீண்டும் மூழ்கத் தொடங்கியுள்ளது.
- 25 May 2025 1:44 PM IST
ரெயில் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து
கேரள மாநிலம் திருச்சூர் அருகே ஜாம்நகர் - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மரம் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. லோகோ பைலட் உடனடியாக ரெயிலை நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
- 25 May 2025 1:41 PM IST
பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியில் இருந்த பெண் காவலர் அபிநயா(25) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்றிரவு பணிக்கு வந்த நிலையில், காலையில் தற்கொலை செய்துகொண்டார். மன உளைச்சலா அல்லது பணிச்சுமையா? வேறு ஏதேனும் காரணமா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.















