இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025


இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-08-2025
x
தினத்தந்தி 29 Aug 2025 9:14 AM IST (Updated: 30 Aug 2025 8:52 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 29 Aug 2025 1:03 PM IST

    நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


    சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் முதல்-அமைச்சர் கேட்டறிந்தார். முன்னதாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணு நலம் பெற விரும்புகிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


  • 29 Aug 2025 1:01 PM IST

    நடிகர் விஷால் - நடிகை தன்ஷிகா நிச்சயதார்த்தம் 


    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் தற்போது ரவி அரசு இயக்கத்தில் ‘மகுடம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 35-வது படம் ஆகும். நடிகர் விஷாலுக்கு எப்போது திருமணம்? என்று திரை உலகமே ஆவலுடன் காத்திருந்தது. ஆனாலும் நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்பட்ட பின்னர் தான் தனது திருமணம் என்பதில் விஷால் உறுதியாக இருந்தார்.

    இந்த நிலையில் சென்னையில் நடந்த ஒரு பட விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சாய் தன்ஷிகாவை காதலிப்பதாகவும், இருவரும் ஆகஸ்டு 29-ந்தேதி திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் விஷால் அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார். இதையடுத்து நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் துரிதமாக நடந்து வந்தது.

    ஆனாலும் நடிகர் சங்க கட்டிடம் முழுமை அடைய இன்னும் சில நாட்கள் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சங்க கட்டிடம் திறந்தால் தான் தனது திருமணம் என்று உறுதியாக இருக்கும் விஷால், நடிகர் சங்க கட்டிடம் முழுமையடையாத நிலையில் சொன்னபடி திருமணம் செய்து கொள்வாரா? மாட்டாரா என்று அனைவருமே எதிர்பார்த்து இருந்தனர். சமீபத்தில் கூட ஒரு நிகழ்ச்சி ஒன்றில் இது தொடர்பான கேள்விக்கு, ‘ஆகஸ்ட் 29-ந்தேதி நல்ல தகவலை சொல்லுவேன்’ என்று விஷால் பதில் அளித்து இருந்தார்.

    அந்த வகையில் சொன்னபடி இன்று முக்கிய நிகழ்வு அரங்கேறி உள்ளது. இதன்படி சென்னை அண்ணா நகரில் உள்ள விஷால் இல்லத்தில் விஷால் - சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம் குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்வில் இரு வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.

    விஷால் - சாய் தன்ஷிகா ஜோடிக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

  • 29 Aug 2025 12:53 PM IST

    கிரிக்கெட்டில் நீங்கள் மாற்ற விரும்பும் ஒரு விதிமுறை என்ன..? - சச்சின் பதில்


    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான சச்சின் தெண்டுல்கரிடம், ரசிகர் ஒருவர் கிரிக்கெட்டில் நீங்கள் மாற்ற விரும்பும் ஒரு விதிமுறை என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதிலளித்த சச்சின், "நான் டிஆர்எஸ் விதிமுறையில் 'நடுவரின் அழைப்பு' (Umpire's Call) தொடர்பான விதியை மாற்றுவேன். வீரர்கள் கள நடுவரின் முடிவில் அதிருப்தி அடைந்ததால் மேல் முறையீடு செய்கின்றனர். எனவே நீங்கள் மீண்டும் அந்த பழைய தீர்ப்பை எடுப்பதற்கான எந்த விருப்பமும் இருக்க கூடாது. வீரர்களுக்கு மோசமான காலகட்டங்கள் இருப்பது போல, அம்பயர்களுக்கும் மோசமான காலகட்டங்கள் உள்ளன. தொழில்நுட்பம் தவறாக இருந்தாலும், அது தொடர்ந்து ஒரே மாதிரியான தவறுகளைச் செய்யும்" என்று கூறினார்.

  • 29 Aug 2025 12:52 PM IST

    ரஜினிக்கு விரைவில் பாராட்டு விழா - நடிகர் விஷால்


    நடிகர் விஷாலுக்கு எப்போது திருமணம்? என்று திரை உலகமே ஆவலுடன் காத்திருந்தது. ஆனாலும் நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்பட்ட பின்னர் தான் தனது திருமணம் என்பதில் விஷால் உறுதியாக இருந்தார். இந்த நிலையில் சென்னையில் நடந்த ஒரு பட விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சாய் தன்ஷிகாவை காதலிப்பதாகவும். இருவரும் ஆகஸ்டு 29-ந்தேதி திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் விஷால் அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.


  • 29 Aug 2025 12:48 PM IST

    சீர்காழி அருகே அரசு பேருந்து மோதி இருவர் உயிரிழந்த சோகம்


    கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி சென்ற அரசு பேருந்து அதிவேகமாக வந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் கடைவீதி அருகே சங்கர் என்பவர் சாலையை கடக்க முயன்றார். அப்பொழுது அவர் மீது பேருந்து மோதாமல் இருக்க பேருந்தை ஓட்டுநர் திருப்பியுள்ளார்.

    இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சங்கர் மீது மோதி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தநிலையில், மதில் சுவரின் மறுபுறம் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண் மீதும் பேருந்து மோதியதால் அவரும் உயிரிழந்தார்.

    பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்ததாக தூய்மைப் பணியாளர் சரண்யா, சங்கர் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பேருந்தில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். தலைமறைவான பேருந்து ஓட்டுனரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

  • 29 Aug 2025 12:26 PM IST

    பீகாரில் பரபரப்பு: காங்கிரஸ் - பாஜக தொண்டர்கள் மாறி மாறி தாக்குதல்


    பீகார் மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் பிரதமர் குறித்து அவதூறாக முழக்கமிட்டதாக குற்றம்சாட்டி, காங்கிரஸ் அலுவலகம் முன்பாக பாஜகவினர் போராட்டம் நடத்தியபோது இரு தரப்பும் மாறி மாறி தாக்கிக்கொண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.


  • 29 Aug 2025 12:19 PM IST

    விஜய்யின் அரசியல் பிரவேசம் எப்படி இருக்கும்..?யாருக்கு சாதகம்..? - கருத்து கணிப்பில் அதிர்ச்சி தகவல்


    தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போதைய நிலையில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. அதாவது, ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையில் ஒரு அணி, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு அணி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை களம் காண்கின்றன.


  • 29 Aug 2025 12:17 PM IST

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.,க்கு காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக வளாக கல்லூரிக்கு மறுதேதி அறிவிக்கும் வரை காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இரு சமூக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  • 29 Aug 2025 11:49 AM IST

    அ.தி.மு.க. கட்சி விதிகள் திருத்தம்: தனி நீதிபதி உத்தரவு ரத்து

    அதிமுக கட்சி விதிகள் திருத்தத்தை எதிர்த்து வழக்கு தொடர கே.சி.பழனிச்சாமி மகன் சுரேன் மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தனுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்று சென்னை ஐகோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

  • 29 Aug 2025 11:40 AM IST

    காஷ்மீரில் கனமழையால் நிலச்சரிவு: குமரியில் இருந்து இன்று புறப்படும் ரெயில் ரத்து


    ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ரெயில் சேவையை வடக்கு ரெயில்வே மாற்றியமைக்க கூறியுள்ளது. 

1 More update

Next Story