இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 3-9-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 3 Sept 2025 9:16 AM IST
தொழில்நுட்பக் கோளாறு - விமானம் நிறுத்தம்
திருச்சியில் இருந்து இன்று சார்ஜாவிற்கு கிளம்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், புறப்பட்ட சில நொடிகளிலேயே தொழில்நுட்பக் கோளாறால் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. கோளாறை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டுள்ளனர். பகல் 12 மணிக்கு மாற்று விமானம் மூலம் அவர்கள் அனைவரும் சார்ஜாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 3 Sept 2025 9:15 AM IST
விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி
தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் சாதித்த வீரர் -வீராங்கனையர் 8 பேருக்கு 3% விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ், அரசுப் பணி வழங்கிய தமிழ்நாடு அரசு. பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினார் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
- 3 Sept 2025 9:15 AM IST
கார் மோதி கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மதுரையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற கார் மோதியதில் பைக்கில் சென்ற கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் மலையரசன் (50), பூவேந்திரன் (70) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
- 3 Sept 2025 9:14 AM IST
வன்முறையில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளர்களுக்கு சிறை
திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் காவலர்கள் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் 29 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். சக தொழிலாளி உயிரிழப்புக்கு இழப்பீடு கேட்டு நேற்று போராட்டம் நடத்தியபோது காவலர்கள் மீது கற்களை வீசினர். 29 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.
- 3 Sept 2025 9:14 AM IST
புகாரில் சிக்கிய ஷாருக் கான் மகள்
மராட்டியத்தில் விவசாய நில ஒப்பந்தம் தொடர்பான போலீஸ் புகாரில் நடிகர் ஷாருக் கானின் மகள் சுஹானா கான் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அலிபாக்கில் ரூ.22 கோடி மதிப்புள்ள இரண்டு நிலங்களை விவசாயத்திற்காக வாங்குவதாக பத்திரப்பதிவின்போது கூறிவிட்டு பண்ணை இல்லம் கட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 3 Sept 2025 9:13 AM IST
நந்தம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கார் திடீர் தீப்பிடிப்பு
சென்னை கிண்டியில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் நந்தம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் இருந்தர்வர்கள் கீழே குதித்து தப்பினர். தகவல் அறிந்த தாம்பரம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.












