இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 3-9-2025


இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 3-9-2025
x
தினத்தந்தி 3 Sept 2025 9:12 AM IST (Updated: 4 Sept 2025 9:14 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 3 Sept 2025 8:08 PM IST

    பொன்முடி சர்ச்சை பேச்சு: முழு வீடியோவை கோர்ட்டில் தாக்கல் செய்த காவல்துறை

    அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் பி. எஸ். ராமன், பொன்முடிக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார்கள் மீது விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை எனக் கூறி புகார்கள் போலீஸார் முடித்து வைத்துவிட்டனர் எனத் தெரிவித்து அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார். அதை படித்துப் பார்த்த நீதிபதி, புகார்களில் முகாந்திரம் இல்லை என்று போலீஸார் எப்படி முடிவுக்கு வந்தனர்? இந்த வழக்கில் புகார்கள் முடித்து வைத்த போலீஸார் பிற புகார்களில் வேகம் காட்டுவார்களா? என்று கேள்வி எழுப்பினார்.

  • 3 Sept 2025 8:03 PM IST

    நீங்கள் வரைந்த ஓவியங்களை விற்க வேண்டுமா?: ஓவிய சந்தையில் விற்க விண்ணப்பிக்கலாம்

    கலை பண்பாட்டுத்துறையின் வாயிலாக ஓவிய மற்றும் சிற்பக் கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் வகையில், சென்னையில் ஓவியம் மற்றும் சிற்பக் கலைப் படைப்புகளைக் காட்சிப்படுத்தி, விற்பனை செய்யும் ‘ஓவியச் சந்தை’ திட்டத்தினை செயல்படுத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

  • 3 Sept 2025 7:59 PM IST

    விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் பணி: ரூ.1964 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு

    சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலான 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 9 ஆயிரத்து 445 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்த திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது.

    இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு தமிழக அரசு முன்னதாக அனுமதி வழங்கியது.

  • 3 Sept 2025 7:20 PM IST

    ராமதாஸ் விதித்த கெடுவிற்கு நாளை பதிலளிக்கிறேன்: அன்புமணி

    பாமக நிர்வாகக் குழு இன்று கூடியது. ராமதாஸ் தலைமையில் இன்று குழுவினர் கூடி ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து, அன்புமணி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்க வரும் 10 ஆம் தேதி வரை காலக்கெடு அளிப்பதாக ராமதாஸ் பேட்டி அளித்தார். முன்பு விதிக்கப்பட்ட காலக்கெடு கடந்த மாதம் 31ஆம் தேதியுடன் முடிந்த நிலையில், தற்போது மீண்டும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், ராமதாஸ் விதித்த கெடுவிற்கு நாளை பதிலளிக்கிறேன் என்று அன்புமணி தெரிவித்துள்ளர். சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அன்புமணி இந்த தகவலை தெரிவித்தார்.

  • 3 Sept 2025 6:49 PM IST

    இரவு 9 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று இரவு 9 மணி வரைமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் , செங்கல்பட்டு , தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், புதுக்கோட்டை,தஞ்சாவூர், திருப்பத்தூர் .ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 3 Sept 2025 6:46 PM IST

    பஞ்சாப் வெள்ளம்: அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு 7-ந்தேதி வரை விடுமுறை

    பஞ்சாபில் ஓட கூடிய சட்லெஜ், பியாஸ் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதுவரை வெள்ளத்திற்கு 30 பேர் பலியாகி உள்ளனர். 3.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், மாநிலத்தில் நிலவும் வெள்ள நிலைமையை முன்னிட்டு, பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் வெளியிட்ட உத்தரவின்படி, அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் செப்டம்பர் 7-ந்தேதி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

  • 3 Sept 2025 5:40 PM IST

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி

    ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டதன் காரணமாக நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்தது. இருப்பினும் ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும். பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து நேற்று 3-வது நாளாக நீடித்தது.

    இந்நிலையில், நீர்வரத்து குறைந்ததையடுத்து ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிக்க தொடங்கியது. தற்போது காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகளுக்கு பரிசல் சவாரி செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் நீரவரத்து 15,000 கன அடிக்கு கீழ் குறைந்தால் மட்டுமே சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 3 Sept 2025 5:14 PM IST

    8 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 3 Sept 2025 5:08 PM IST

    மத்திய பிரதேசம்: மருத்துவமனையில் எலி கடித்த 2 குழந்தைகளில் ஒரு குழந்தை பலி

    மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் மகராஜா யஷ்வந்த்ராவ் என்ற பெயரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் மிக பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான இதில், சிகிச்சைக்காக 2 குழந்தைகள் கொண்டு வரப்பட்டு இருந்தன. அவற்றை எலிகள் கடித்து விட்டன என குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்தநிலையில், மத்திய பிரதேசம் மருத்துவமனையில் எலி கடித்த 2 குழந்தைகளில் ஒரு குழந்தை பலியாகி உள்ளது. மற்றொரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  • 3 Sept 2025 4:46 PM IST

    கெஜ்ரிவால் நாளை பஞ்சாப் பயணம்; வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிடுகிறார்

    வடமாநிலங்களில் ஒன்றான இமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பரவலாக பருவமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், பஞ்சாபில் ஓட கூடிய சட்லெஜ், பியாஸ் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் மற்றும் மாநில பொறுப்பு தலைவர்களான மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகிய 3 பேரும் பஞ்சாப் பக்கமே போகவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

    இந்நிலையில், கெஜ்ரிவால், பஞ்சாப் மாநிலத்திற்கு நாளை சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிடுகிறார். அவருடன் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் செல்கிறார்.

1 More update

Next Story