இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 30-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 30 Oct 2025 7:09 PM IST
சுப்ரீம் கோர்ட்டின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் யாதவ் நியமனம்
சுப்ரீம் கோர்ட்டின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் யாதவை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். நீதிபதி சூர்யகாந்த் யாதவ், நவம்பர் 24ம் தேதி தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 30 Oct 2025 6:33 PM IST
இந்தியாவுக்கு மீண்டும் அரிய பூமி தாதுக்களை ஏற்றுமதி செய்யும் வகையில், சில இந்திய நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியது சீன அரசு. மின் வாகனங்கள், ஸ்மார்ட்போன்கள் போன்ற உயர் தொழில்நுட்பப் பொருட்களின் உற்பத்திக்கு அரிய பூமி தாதுக்கள் மிக அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
- 30 Oct 2025 6:32 PM IST
திருவள்ளூர் மாவட்டத்தில் நவ.1ம் தேதி அனைத்து பள்ளிகளும் முழு நாள் செயல்படும்
திருவள்ளூர் மாவட்டத்தில் நவ. 1ம் தேதி அனைத்து பள்ளிகளும் முழு நாள் செயல்படும் என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக அக்.22ம் தேதி வழங்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 30 Oct 2025 6:29 PM IST
கொரோனா பெருந்தொற்றை விட, காற்று மாசுபாட்டால் ஆண்டுதோறும் இறப்பவர்கள் அதிகம்
உலகளவில் காற்று மாசுபாட்டால் 2024ம் ஆண்டில் மட்டும் 81 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். இந்தியாவிலும் அமைதியாக பல உயிர்களைக் கொன்று வருகிறது காற்று மாசு, அது ஒரு Silent Killer” என எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார்.
- 30 Oct 2025 6:24 PM IST
பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக் கருத்து - ராகுல் காந்தி மீது புகார்
பீகார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி வாக்குக்காக நடனம் கூட ஆடுவார் என விமர்சித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி. ராகுல்காந்தியின் பிரசாரத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என பீகார் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மாநில பாஜக புகார் அளித்துள்ளது.
- 30 Oct 2025 6:20 PM IST
இன்னும் 6 மாதத்தில் உட்கட்சி பிரச்னை உட்பட அனைத்தும் சரியாகும் - அன்புமணி
இன்னும் 6 மாதத்தில் உட்கட்சி பிரச்சினை உட்பட அனைத்தும் சரியாகும் என சேலத்தில் பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
- 30 Oct 2025 6:17 PM IST
மும்பையில் 17 குழந்தைகளை கடத்தியவர் என்கவுன்டர்
மும்பையில் 17 குழந்தைகளை பிணைக்கைதியாக வைத்த நபரை என்கவுன்டர் செய்தது காவல் துறை. கடத்தல்காரர், போலீஸாரை தாக்க முயன்ற நிலையில் போலீஸ் அவரை துப்பாக்கியால் சுட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது கடத்தல்காரர் உயிரிழந்தார்.
- 30 Oct 2025 5:20 PM IST
சென்னையில் நாய், பூனை வளர்க்க உரிமம் பெறாவிட்டால் ரூ.5000 அபராதம்
செல்ல பிராணிகளான நாய், பூனைகளுக்கு உரிமம் கட்டாயம் பெற வேண்டும். இதற்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 24-ந்தேதிக்குள் உரிமம் பெற வேண்டும் அப்படி பெற தவறினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மாநகராட்சி ஊழியர்கள் இதை வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்துவார்கள் மேலும் பூங்காக்கள் நடைபாதைகள் பிற பகுதிகளில் கழுத்துப்பட்டை இல்லாமல் நாய்களை அழைத்து வந்தால் உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கவும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
- 30 Oct 2025 5:18 PM IST
நவ. 2-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்; 60 கட்சிகளுக்கு திமுக அழைப்பு
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் தொடர்பாக விவாதிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 2-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை தி.நகரில் உள்ள அக்கார்டு நட்சத்திர ஓட்டலில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
- 30 Oct 2025 5:11 PM IST
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 13 உதவி இயக்குநர்கள் அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரியில் பயிற்சி பெற்றமைக்கான தகுதி சான்றுகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் இன்று (30.10.2025) வழங்கினார்.















