டெல்லி - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்: 4 நாட்களாக தவிக்கும் வாகன ஓட்டிகள்

4 நாட்களாக நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பாட்னா
டெல்லி, பீகார், கொல்கத்தா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில், கடந்த வெள்ளிக்கிழமை பீகாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, தேசிய நெடுஞ்சாலை-19ல் ஆறு வழிச்சாலை அமைக்கும் நிறுவனம் உருவாக்கிய பல மாற்றுப் பாதைகளும், சர்வீஸ் சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் சாலைகளில் ஆங்காங்கே பெரும் பள்ளங்கள் உருவாகி, நீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
இது போக்குவரத்து நெரிசலை மேலும் மோசமாக்கியுள்ளது. சில கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கவே பல மணிநேரம் ஆகிறது. ரோஹ்தாஸ் நகரிலிருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ள அவுரங்காபாத் வரையிலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
இந்த போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண, உள்ளூர் நிர்வாகம் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்று வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர். வெளியூரிலிருந்து கனரக வாகனங்களும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. நான்கு நாட்களாக போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். லாரி ஓட்டுநர்கள் வேதனையுடன் கூறியதாவது: “தேசிய நெடுஞ்சாலை ஆணையமோ அல்லது சாலை அமைக்கும் நிறுவனமோ இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிலைமை மிகவும் மோசமாகி, 24 மணி நேரத்தில் ஐந்து கிலோமீட்டர் தூரம் மட்டுமே வாகனங்கள் கடக்க முடிகிறது,” என்றனர்.






