தொண்டையில் மாத்திரை சிக்கி 4 வயது சிறுவன் பலியான சோகம்.. கதறி துடித்த பெற்றோர்

திருத்தணி,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வேலு (வயது 32). இவர் பொதட்டூர்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சசிகலா (26). மகன்கள் ஜோகித் (4), கவுதம் (2). இவர்களில் ஜோகித் தந்தை வேலை செய்யும் தனியார் பள்ளியில் யு.கே.ஜி., படித்து வந்தான்.
நேற்று முன்தினம் ஜோகித்துக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக பெற்றோர் அங்கு உள்ள தனியார் கிளினிக்குக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் சிறுவனுக்கு சிகிச்சை அளித்து மாத்திரை வழங்கியதாக கூறப்படுகிறது.
காய்ச்சல் தொடர்ந்து இருந்ததால் ஜோகித்துக்கு இரவு தாய் சசிகலா மாத்திரை கொடுத்தார். மாத்திரை சிறுவனின் தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டது.
உடனடியாக பெற்றோர் ஜோகித்தை சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு ஜோகித் ஏற்கனவே இறந்து விட்டான் என்று தெரிவித்தனர். இதை கேட்டு ஜோகித்தின் பெற்றோர் கதறி அழுது துடித்தது ஆஸ்பத்திரிக்கு வந்த பொதுமக்களை கண்கலங்க வைத்தது.
தகவலறிந்து விரைந்து வந்த திருத்தணி போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் குழந்தைகளுக்கு மாத்திரையை அப்படியே கொடுக்காமல் பொடியாக மாற்றி குழைத்து கொடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.






