உண்மை உறங்குவதில்லை; நீதியே வெல்லும் - தவெக நிர்மல்குமார்

தவெக மாநில இணைச்செயலாளர் நிர்மல்குமார் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை,
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இச்சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீசார் த.வெ.க. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் (வயது 49), பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் மற்றும் சிலர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் கடந்த 29-ந்தேதி திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே உள்ள கிராமத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை தனிப்படை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் ஆகியோரை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்தன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோரை கைது செய்ய தீவிரம் காட்டினர். இவர்கள் தற்போது தலைமறைவாக உள்ளனர்.
இந்த நிலையில், தவெக மாநில இணைச்செயலாளர் நிர்மல்குமார் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
அதிகார மமதையில் அவதூறு, பழிச்சொல், வன்மம், காழ்ப்புணர்ச்சி, கட்டுக்கதை என அனைத்தையும் அரங்கேற்றினர்….
உண்மை உறங்குவதில்லை; ஓர் நாள் உரக்கச் சொல்லும்.
நீதியே வெல்லும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






