மத்திய மந்திரி பியூஷ் கோயல் நாளை மறுதினம் தமிழகம் வருகை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக (அன்புமணி ராமதாஸ்) , தமிழ் மாநில காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேவேளை, அதிமுக - பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக கூட்டணியில் விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை மறுதினம் (21ம் தேதி) தமிழகம் வர உள்ளார். இந்த வருகையின்போது அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், அதிமுக - பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிற கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து வரும் 23ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சிகள் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.






