தமிழகத்தில் தாமரை மலர்வதை விஜய் பார்க்கத்தான் போகிறார் - தமிழிசை சவுந்தரராஜன்

‘தண்ணீர் ஒட்டாவிட்டாலும் தமிழகத்தில் தாமரை மலரும்’ என்று விஜய்க்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
இன்றைக்கு உலகளவில் பிரதமர் நரேந்திர மோடி புகழடைந்து கொண்டிருக்கும் போது, யாரோ ஒருவர் மிஸ்டர் பி.எம். என்று கூப்பிட்டால் மக்கள் யாரும் ரசிக்க மாட்டார்கள். அவர் மாஸ்டர் பி.எம். ஆக, உலக நாடுகளும், மக்களும் விரும்புகிற பி.எம். ஆக இருந்து கொண்டிருக்கிறார்.
விஜய் அரசியலில் புதியவர். அவர் வரவெல்லாம் நம்மை ஒன்றும் செய்யாது. இன்றைய காலகட்டத்தில் பா.ஜனதா பலம் பொருந்திய கட்சியாக வளர்ந்து உள்ளது. 2026-ல் ஆளுங்கட்சியோடு போட்டி என்பது பா.ஜனதா கூட்டணிக்கு தான். தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாவிட்டாலும் தமிழகத்தில் தாமரை மலரப்போகிறது, வளரப்போகிறது எல்லோரும் ஆச்சரியப்படும் அளவுக்கு மலரப்போகிறது. அதை தம்பி விஜய் பார்க்கத்தான் போகிறார்.
விஜய்க்கு வசனம் எழுதிக் கொடுத்தவர், அங்கிள், மிஸ்டர் பி.எம். என்று எழுதிக் கொடுத்து விட்டார். அதை தான் அவர் படித்து உள்ளார். பா.ஜனதா கூட்டணி பொருந்தா கூட்டணியா?, பொருந்துகிற கூட்டணியா? என்பது குறித்து அவருக்கு என்ன தெரியும். அவர் அரசியல் ஞானம் பெறவில்லை என்பதற்கு கச்சத்தீவை பற்றி பேசியதே உதாரணம். மாநாட்டில் ஒரு கொடியை ஒழுங்காக நட முடியவில்லை. ஒரு மாநாட்டை ஒழுங்காக நடத்த முடியாதவர்கள் எப்படி ஆட்சி நடத்துவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






