விக்சித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதிச் சட்டமுன்வடிவை திரும்பப் பெற வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

கோப்புப்படம்
கிராமப்புற மக்களின் நலன்களையும் பாதிக்கும் சட்டமுன்வடிவை திரும்பப் பெற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியத் திருநாட்டின் ஊரகப் பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், ஒவ்வொரு வீட்டிலும் உள்ள முதிர்ந்த உறுப்பினர்களுக்கு ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் நூறு நாட்கள் வேலை அளிக்கும் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் உருவாக்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது.
இந்தத் திட்டத்திற்குப் பதிலாக, விக்சித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதிச் சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தற்போது தாக்கல் செய்துள்ளது. இந்தச் சட்டமுன்வடிவின் பிரிவு 2(5)-ன்படி, ஒவ்வொரு நிதியாண்டிலும் மாநிலங்களுக்கான ஒதுக்கீடு என்பது மத்திய அரசு வகுக்கும் வரம்புகளுக்கு உட்பட்டு மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி மக்கள் தொகை, வறுமை ஆகியவற்றின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால், வளர்ச்சி அடைந்த மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு கணிசமாக குறைவதோடு, வேலை பெறுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறையக்கூடும்.
இதேபோன்று, பிரிவு 22(1)-ன்படி, மத்திய அரசின் திட்டமாக இருந்த தற்போதைய திட்டம் மத்திய நிதி உதவித் திட்டமாக மாற்றப்பட உள்ளது. பிரிவு 22(2)-ன்படி, இந்த திட்டத்திற்கான மத்திய நிதி உதவி என்பது 60 சதவீதமாகவும், மாநில நிதி உதவி என்பது 40 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, மத்திய அரசின் நிதி உதவி என்பது நூறு சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. மாநிலங்களின் மீது 40 சதவீத கூடுதல் நிதி திணிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், இந்தத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்துவதற்கான எந்த வழிவகையும் இந்தச் சட்டமுன்வடிவில் மேற்கொள்ளப்படவில்லை.
மேற்படி சட்டமுன்வடிவின் பிரிவு 6(2)-ல், ஒவ்வொரு நிதியாண்டிலும் விதைப்பு மற்றும் அறுவடை உள்ளிட்ட வேளாண் பருவம் குறித்த 60 நாட்களை மாநில அரசு அறிவிக்க வேண்டுமென்றும், அந்த நாட்களில் இந்தச் சட்டத்தின்கீழ் எந்தப் பணியும் மேற்கொள்ளக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வேளாண் பருவத்தில் குறைந்த ஊதியத்தில் விவசாயத் தொழிலாளர்கள் விவசாயப் பணிகளை மேற்கொள்ளும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டமுன்வடிவு வேலை பெறுவோரின் எண்ணிக்கையை குறைக்கவும், வேளாண்பருவக் காலத்தில் விவசாயத் தொழிலாளர்களின் ஊதியத்தை குறைக்கவும் வழிவகை செய்வதோடு, மாநில அரசுகளின் மீது கூடுதல் நிதிச் சுமையையும் ஏற்படுத்தும். ஏற்கெனவே, நிதிப் பகிர்வின் மூலம் குறைந்த ஒதுக்கீட்டை பெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டிற்கு இந்தச் சட்டமுன்வடிவு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.
மாநிலங்களின் நலன்களையும், விவசாயப் பெருங்குடி மக்கள் உள்ளிட்ட ஏழையெளிய கிராமப்புற மக்களின் நலன்களையும் பாதிக்கும் விக்சித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு உறுதிச் சட்டமுன்வடிவினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் அல்லது நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்ப வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






