கிராம ஊராட்சி செயலாளர்களை உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் - சீமான்


கிராம ஊராட்சி செயலாளர்களை உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் - சீமான்
x

கோப்புப்படம் 

தமிழ்நாடு முழுவதும் பணியாற்றும் கிராம ஊராட்சி செயலாளர்களை உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

சென்னை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராம ஊராட்சி செயலாளர்களை உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க திமுக அரசு மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இதுகுறித்து கிராம ஊராட்சி செயலாளர்கள் கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாத திமுக அரசு, சென்னையில் போராட்டத்தை முன்னெடுத்த கிராம ஊராட்சி செயலாளர்கள் மீது காவல்துறை மூலம் அடக்குமுறையை ஏவி, கைது செய்வது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.

தமிழ்நாடு முழுவதும் 12,525 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் பணியாற்றும் கிராம ஊராட்சி செயலாளர்கள் ஊராட்சி தலைவர், உறுப்பினர்களுக்கு உறுதுணையாக இருந்து ஊராட்சியின் அன்றாடச் செயல்பாடுகளைக் கவனிப்பதோடு, மத்திய, மாநில அரசுத் திட்டங்களையும் மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்கின்றனர். குறிப்பாக, குடிநீர், தெருவிளக்கு, சாலைகள் பராமரிப்பு போன்ற அடிப்படை வசதிகளை உறுதி செய்தல், சுகாதாரம், வரிவசூல் உள்ளிட்ட அனைத்து மக்கள் திட்டங்களையும் நிறைவேற்றும் அரசுப்பணியாளராகச் சிறப்புற செயல்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, உள்ளாட்சி மன்றத்தேர்தல் தாமதப்படும் நேரங்களில் ஊராட்சிகளின் முழு நிர்வாகப்பணிகளையும் ஊராட்சி செயலாளர்களே கவனித்து வருகின்றனர்.

அத்தகு பொறுப்புமிகு கிராம ஊராட்சி செயலாளர்களுக்குத் தற்போது ஓய்வூதியமாக 2,000 மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது. கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு தற்போது பதிவு எழுத்தர்களுக்கு இணையான கால முறை ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், பதிவு எழுத்தர்களை தமிழ்நாடு அரசின் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத்தில் இணைத்துள்ள திமுக அரசு, அதே அளவில் ஊதியம் பெறும் ஊராட்சி செயலாளர்களை இணைக்க மறுப்பதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சி செயலாளர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். தங்களின் வாழ்வாதார உரிமைக்காக போராடும் கிராம ஊராட்சி செயலாளர்களை காவல்துறை மூலம் அடக்கி ஒடுக்குவதற்கு பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் திமுக அரசு கட்டிக்காத்த சமூக நீதியா? பெற்றுத்தந்த சம உரிமையா?

ஆகவே, தமிழ்நாடு முழுவதும் பணியாற்றும் கிராம ஊராட்சி செயலாளர்களை உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் உடனடியாக இணைக்க வேண்டுமெனவும், ஏற்கனவே ஓய்வுபெற்ற கிராம ஊராட்சி செயலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியமாக 15,000 ரூபாய் வழங்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். தங்களின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி கிராம ஊராட்சி செயலாளர்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என்றும் உறுதியளிக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story