நிரப்பப்பட்ட வாக்காளர்கள் கணக்கீட்டுப் படிவங்களை உடனே சமர்ப்பிக்க வேண்டும்: தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல்

நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனே சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) 27.10.2025 அன்று அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் கணக்கீட்டு காலம் வரும் 11-ந்தேதியுடன் நிறைவடைகிறது.
இந்த பணிகள் நிறைவடைந்த பின்னரே வரைவு வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்படும். அதன்படி, வரும் 16-ந்தேதியன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அவ்வப்போது தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தி வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு திரும்ப பெறப்படாத கணக்கீட்டு படிவங்களின் பட்டியல், வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு வழக்கமான அடிப்படையில் பகிரப்பட்டு வருகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கு முன் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, வாக்காளர் பதிவு அலுவலர் நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பிட்ட முகவரியில் இல்லாத வாக்காளர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் இரட்டைப்பதிவு செய்தவர்கள் போன்ற காரணங்களுடன், திரும்ப பெறப்படாத கணக்கீட்டுப் படிவங்களின் பட்டியலை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பட்டியல் வரும் 11-ந்தேதியன்று கணக்கீட்டு காலம் நிறைவடைந்த பின்னர் இறுதி செய்யப்படும்.
எனவே, அனைத்து வாக்காளர்களும் தங்களது நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை கடைசி தேதிவரை காத்திருக்காமல், விரைந்து சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பும் முழுமையான மற்றும் பிழையற்ற வாக்காளர் பட்டியல் தயாரிப்பை உறுதி செய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
பெயர் சேர்ப்பது, நீக்கும் பணி, வரும் 16-ந்தேதி முதல் ஜனவரி 15-ந்தேதிவரை நடைபெறும். இந்த காலகட்டத்தில், வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல் அல்லது ஏற்கனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிப்பது ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.
எந்த ஒரு தகுதியான வாக்காளரும் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல், எந்த ஒரு தகுதியற்றவரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாத வகையில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






