நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்படும்: சொன்னீங்களே செஞ்சீங்களா - நயினார் நாகேந்திரன்

தமிழகத்தின் நீர் மேலாண்மை நிர்கதியற்றுக் கிடப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழகம் முழுவதிலும் நீர்நிலைகளில் பரவியுள்ள சீமைக் கருவேல மரங்களையும், ஆகாயத் தாமரைச் செடிகளையும் அகற்றுவோம் என்று தேர்தல் வாக்குறுதி எண் 49-ல் சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்-அமைச்சரே?
தமிழகத்தின் விவசாயத்திற்கு வலுசேர்க்கும் வகையில் பெய்யும் மழைநீரைச் சேகரித்து வைக்கும் மையங்களாகவும், மழைநீர் வெள்ளமாக மாறிவிடாதபடி தடுக்கும் மழைநீர் வடிகால்களாகவும் நமது நீர்நிலைகள் பெரும்பங்கு வகித்து வருகின்றன. அவற்றை முறையாகத் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தி, சுத்தப்படுத்தி பராமரிக்க வேண்டிய ஆளும் அரசோ, நமது நீர்நிலைகளை மொத்தமாகக் கைகழுவி விட்டுவிட்டது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் நீர்நிலைகளை எல்லாம் சரியாகப் பராமரிப்போம் என வாக்குறுதி கொடுத்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர் பொதுப்பணித்துறையில் இருந்த நீர்வளத்துறையைத் தனித்துறையாகப் பிரித்தனர். ஆனால், தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் தண்ணீரே தெரியாதளவு ஆகாயத் தாமரை படர்ந்துள்ளது. சீமைக் கருவேல மரங்களை அழித்துத் தமிழக மண் வளத்தைப் பாதுகாக்க ஏற்பாடு செய்யுங்கள் என உயர்நீதிமன்றமே பலமுறை கெடு விதித்துவிட்டது. திமுக அரசின் நீர்வளத்துறையோ நீர்த்துப் போய்விட்டது, தமிழகத்தின் நீர் மேலாண்மை நிர்கதியற்றுக் கிடக்கிறது.
திமுக அரசின் இந்த அலட்சியத்தால் தான், கஷ்டப்பட்டு விளைவித்த பயிர்கள் வெயிலில் கருகுவதும், வெள்ளத்தில் மூழ்கி முளைத்துப் போவதும், மக்கள் சுத்தமான குடிநீருக்காகத் திண்டாடுவதும் தொடர்கின்றன. “நீரின்றி அமையாது உலகு” என்பதை உலகிற்கு எடுத்துக் கூறிய நம் தமிழ் மக்களைத் தண்ணீருக்காக அல்லாட வைத்த ஆளும் அரசை அரியணையில் இருந்து அகற்றினால் மட்டுமே, நமது நீர் நிலைகளின் தரம் மேம்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






