தென்காசி மாவட்டத்தில் 4 நீர்த்தேக்கங்களில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு

4 நீர்த்தேக்கங்களில் இருந்தும் 143 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது.
தென்காசி,
கார் பருவ சாகுபடிக்காக கடனாநதி, அடவிநயினார், கருப்பாநதி, ராமநதி ஆகிய நீர்த்தேக்கங்களில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;
கருப்பாநதி நீர்த்தேக்கம்
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், கருப்பாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து 11.06.2025 முதல் 31.10.2025 முடிய 143 நாட்களுக்கு வினாடிக்கு 25 கன அடிக்கு மிகாமல், பாசன பருவ காலத்தின் மொத்த தேவையான தண்ணீர் அளவான 180.37 மி.கனஅடிக்கு மிகாமல் திறந்துவிடுவதற்கு அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் தென்காசி மாவட்டத்தில், தென்காசி வட்டம், கடையநல்லூர் வட்டம் மற்றும் கடையநல்லூர் வட்டத்தில் உள்ள வைரவன் குளம், கிருஷ்ணாபுரம், சொக்கம்பட்டி, குமந்தாபுரம், போகநல்லூர், கடையநல்லூர், இடைகால் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இராமநதி நீர்த்தேக்கம்
தென்காசி மாவட்டம், தென்காசி வட்டம், இராமநதி நீர்த்தேக்கத்தில் இருந்து 11.06.2025 முதல் 31.10.2025 வரை 143 நாட்களுக்கு வினாடிக்கு 60 கன அடிக்கு மிகாமல் பாசன பருவ காலத்தின் மொத்த தேவையான தண்ணீர் அளவான 168.03 மி.க.அடிக்கு மிகாமல் திறந்துவிடுவதற்கு அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் தென்காசி மாவட்டத்தில், தென்காசி வட்டம், கடையம், மேலக்கடையம், கோவிந்தப்பேரி, ஆழ்வார்குறிச்சி, வாகைக்குளம், பொட்டல்புதூர், அயன்பொட்டல்புதூர், ரவணசமுத்திரம், பாப்பன்குளம் கிராமங்களில் உள்ள 1,008.19 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
கடனா நீர்த்தேக்கம்
தென்காசி மாவட்டம், தென்காசி வட்டம் கடனா நீர்த்தேக்கத்திலிருந்து 11.06.2025 முதல் 31.10.2025 முடிய 143 நாட்களுக்கு நீர் இருப்பை பொறுத்து வினாடிக்கு 125 கன அடி அளவுக்கு மிகாமல், கார் பருவ சாகுபடிக்கு மொத்த தேவையான 664.60 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள தென்காசி மற்றும் அம்பாசமுத்திரம் வட்டங்களில் தர்மபுரம் மடம், சிவசைலம், ஆழ்வார்குறிச்சி I&II, மேல ஆம்பூர், கீழ ஆம்பூர், மன்னார்கோவில், திருவாலீஸ்வரம், பிரம்மதேசம், பள்ளக்கால், புதுக்குடி, பனஞ்சாடி மற்றும் இரங்கசமுத்திரம் ஆகிய கிராமங்களில் உள்ள பாசனப்பரப்புகள் பயன்பெறும்.
அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கம்
தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், மேக்கரை கிராமத்தில் உள்ள அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்தில் இருந்து 11.06.2025 முதல் 31.10.2025 முடிய 143 நாட்களுக்கு நீர் இருப்பை பொறுத்து வினாடிக்கு 60 கன அடிக்கு மிகாமல், பாசன பருவகாலத்தின் மொத்த தேவை தண்ணீர் அளவான 268.43 மி.க.அடிக்கு மிகாமல் திறந்துவிடுவதற்கு அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் தென்காசி மாவட்டத்தில், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டம் மற்றும் கடையநல்லூர் வட்டத்தில் உள்ள வடகரை கீழ்பிடாகை, வடகரை மேல்பிடாகை, பண்பொழி, இலத்தூர், குத்துக்கல் வலசை, கொடிக்குறிச்சி, அச்சன்புதூர், நெடுவயல், நயினாகரம், கிளாங்காடு, ஆய்க்குடி மற்றும் சாம்பவர் வடகரை நிலங்கள் பாசன வசதி பெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.