வைகை அணையில் இருந்து 3-ம் கட்டமாக தண்ணீர் திறப்பு


வைகை அணையில் இருந்து 3-ம் கட்டமாக தண்ணீர் திறப்பு
x

வைகை அணையில் இருந்து 3-ம் கட்டமாக தண்ணீர் திறக்கப்பட்டது.

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக இந்த அணை விளங்குகிறது. கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள கண்மாய்களில் தண்ணீரை நிரப்பும் வகையில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

அந்த அரசாணையில், மதுரை உள்பட 3 மாவட்ட தேவைக்காக வைகை அணையில் இருந்து 3 கட்டங்களாக 17 நாட்களில் 1,824 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கும்படி கூறப்பட்டு இருந்தது. அதன்படி, முதற்கட்டமாக வைகை அணையின் பூர்வீக பாசன பகுதியான ராமநாதபுரம் மாவட்ட தேவைக்காக 6 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு சிவகங்கை மாவட்ட தேவைக்காக 5 நாட்கள் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்தநிலையில் 3-வது மற்றும் கடைசி கட்டமாக மதுரை மாவட்ட தேவைக்காக நேற்று காலை வைகை அணையில் இருந்து சிறிய மதகுகள் வழியாக வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அப்போது சிறிய மதகுகளில் இருந்து ஆற்றுப்படுகையில் வைகை தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது.

இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறுகையில், “வைகை அணையில் இருந்து மதுரை மாவட்ட தேவைக்காக 7 நாட்களில் 428 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன்மூலம் மதுரை மாவட்டத்தில் ஆற்றங்கரையோரம் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட உறை கிணறுகளில் நீர்மட்டம் உயரும். வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது. சிறுவர்கள் மற்றும் கால்நடைகளை ஆற்றுப்பகுதிக்கு அழைத்து செல்லக்கூடாது” என்றனர்.

1 More update

Next Story