உங்களுடைய அன்புக்காக எவ்வளவு பெரிய வருமானத்தையும் தூக்கி எறியலாம் - விஜய் பேச்சு


உங்களுடைய அன்புக்காக எவ்வளவு பெரிய வருமானத்தையும் தூக்கி எறியலாம் - விஜய் பேச்சு
x

திமுக அரசு நம்மை நம்ப வைத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என்று விஜய் கூறியுள்ளார்.

அரியலூர்

விக்கிரவாண்டி, மதுரை மாநாட்டினை தொடர்ந்து, திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பிரசாரத்தை தொடங்கியுள்ளார். திருச்சியில் காந்தி மார்க்கெட் மரக்கடை அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பு இன்று மதியம் தொண்டர்கள் மத்தியில் விஜய் பேசினார். தொடர்ந்து அரியலூர் வந்தடைந்த விஜய் அங்கு அண்ணா சிலை அருகே திரண்டுள்ள தொண்டர்கள் மத்தியில் பரப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

உங்களுடைய அன்புக்காக எவ்வளவு பெரிய உயரத்தையும், எவ்வளவு பெரிய வருமானத்தையும், எவ்வளவு பெரிய வசதியையும் தூக்கி எறிந்துவிட்டு வரலாம். உங்களுடைய இந்த அன்பைவிட, பாசத்தைவிட, உங்களைவிட எனக்கு இந்த உலகத்தில் வேறு எதுவும் பெரிதாக தெரியவில்லை. சாதாரணமாக இருந்த விஜய்யை இந்த உயரத்தில் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள்.

என்னங்க பெரிய பணம்? வேண்டும் என்கிற அளவுக்கு பார்த்தாச்சு. அரசியலுக்கு வந்துதான் நான் பணம் சம்பாதிக்க வேண்டுமா என்ன? அதற்கு கொஞ்சம் கூட அவசியமே இல்லை. எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த உங்களுக்காக உழைப்பதை தவிர எனக்கு வேறு எந்த எண்ணமும், எந்த வேலையும் இல்லை.

நம்மை மேலேயும், கீழேயும் மோசமாக ஆண்டுகொண்டிருக்கிற பாஜக அரசையும், திமுக அரசையும் கேள்வி கேட்க வந்திருக்கிறேன். 2029-ல் பாஜகவின் ஆட்சி முடியப்போகிறது என்பது அனைவரும் தெரிந்த ஒன்றுதான். தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தென் இந்தியாவை விட வட இந்தியாவுக்கு அதிக நாடாளுமன்ற தொகுதிகள் கிடைப்பதற்காக மோசடி வேலைகள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

திமுக அரசு நம்மை நம்ப வைத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. 505 தேர்தல் வாக்குறுதிகளை திமுக கொடுத்தது. அதில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. எல்லாவற்றையும் நிறைவேற்றிவிட்டதாக மனசாட்சியே இல்லாமல் கதை விடுறீங்களே சி.எம். சார். இப்படியே நாம் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான். இவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரப் போவதில்லை. இருந்தால் தானே. ஏமாற்றுவதில் பாஜகவும், திமுகவும் ஒரே வகையறாதான்.

வறட்சியான மாவட்டங்களில் முதல் வரிசையில் காலம் காலமாக இருக்கிற மாவட்டம்தான் அரியலூர் மாவட்டம். சிமெண்ட் உற்பத்தியும், முந்திரி உற்பத்தியும் நடக்கிறது. பட்டாசுத் தொழிலும் நடைபெறுகிறது. மாவட்டத்தில் உள்ள தொழில்களை மேம்படுத்துவது குறித்து அரசு யோசிப்பதில்லை.

யுனெஸ்கோவின் மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் கோவிலை முறையாக பராமரிக்க வேண்டும். ஜெயங்கொண்டத்தில் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் அமைக்கவில்லையே ஏன்? இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தும் போதிய பேருந்து வசதி இல்லையே ஏன்?

தீர்வை நோக்கிப் போவதும், தீர்வை காண்பதும் மட்டும்தான் தவெகவின் லட்சியம். நம்முடைய தேர்தல் அறிக்கையில் இதற்கான விளக்கத்தை தெளிவாக சொல்லுவோம். அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுக்க மாட்டோம். எது நடைமுறைக்கு சாத்தியமோ, எது உண்மையோ, அதை மட்டும்தான் சொல்வோம்.

மருத்துவம், குடிநீர், கல்வி, சாலை வசதிகள், பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பில் எந்த சமரசமும் இருக்காது. ஏழ்மை, வறுமை இல்லாத தமிழகம், குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத தமிழகம், உண்மையான மக்களாட்சி, மனசாட்சி உள்ள மக்களாட்சிதான் நம்முடைய நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story