மேகதாது அணை திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பி விட்டோம்: காவிரி மேலாண்மை ஆணையம்

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணையை காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர்,
கர்நாடக மாநிலத்தில் மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சி செய்யும் விவகாரம் இரு மாநிலங்கள் இடையே பேசுபொருளாகி வருகிறது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் வருகிற 8-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்த சூழலில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் நேற்று தஞ்சை-திருச்சி மாவட்ட எல்லையில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது நீர்ப்பாசனத்துறை தலைமை பொறியாளர் சிவக்குமார், கண்காணிப்பு பொறியாளர் திலீபன், செயற்பொறியாளர்கள் இளங்கோவன், ஆனந்தன் மற்றும் பொறியாளர்கள் உடன் இருந்தனர்.
பின்னர் எஸ்.கே.ஹல்தார் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேகதாது அணை திட்ட அறிக்கை எங்களுக்கு (மத்திய நீர்வள ஆணையத்தால்) அனுப்பப்பட்டது. அது காவிரி மேலாண்மை ஆணையத்திடம் 2 ஆண்டுகள் நிலுவையில் இருந்தது. அந்த திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் திருப்பி அனுப்பி விட்டோம். அந்த திட்ட அறிக்கை எங்களிடம் நிலுவையில் இல்லை.
இந்த திட்டத்தின் தொழில்நுட்பம், வர்த்தக சாத்தியக்கூறு இதுவரை நிரூபிக்கப்படவில்லை. இன்றைய தேதியில் இந்த திட்டம் முதலீட்டுக்கு ஏற்றதா? என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை. அவ்வாறு நிரூபிக்கப்பட்டால் அதன் பிறகு தான் இந்த திட்டம் நிறைவேற்றப்படுமா? இல்லையா? என கூற முடியும். ஆனால் இன்றைய தேதி வரை நிரூபிக்கப்படவில்லை.
மேகதாது அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதனால் அதுகுறித்த விவாதத்தை தவிர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.






