தென்காசியில் ரூ.1,020 கோடியில் நலத்திட்டங்கள்: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

இன்று (புதன்கிழமை) நடைபெறும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
தென்காசி மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்காக காலையில் நெல்லை மாவட்டம் அரியநாயகிபுரத்தில் இருந்து காரில் புறப்பட்டு தென்காசி மாவட்டத்துக்கு செல்கிறார்.
அவருக்கு மாவட்ட எல்லையான ஆலங்குளத்தில் நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஆவுடையப்பன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அத்தியூத்து, சுரண்டை, சாம்பவர்வடகரை வழியாக இலத்தூருக்கு முதல்-அமைச்சர் செல்கிறார். அங்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ஒரு லட்சமாவது வீட்டை சுமதி என்ற பயனாளிக்கு வழங்கி திறந்து வைக்கிறார்.
பின்னர் இலத்தூரில் இருந்து தென்காசி ஆய்க்குடி செல்லும் சாலையில் அனந்தபுரம் மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 24 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.445 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதுதவிர ரூ.575 கோடியில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார். ஒட்டுமொத்தமாக தென்காசி மாவட்டத்தில் ரூ.1,020 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பேசுகிறார்.
இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. பந்தலைச் சுற்றிலும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன.
பின்னர் ஆய்க்குடி அமர்சேவா சங்கத்துக்கு சென்று அங்குள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் முதல்-அமைச்சர் கலந்துரையாடுகிறார். அதன்பிறகு குற்றாலம் சுற்றுலா மாளிகைக்கு செல்லும் முதல்-அமைச்சர் மதிய உணவுக்கு பின்னர் மதுரை புறப்பட்டு செல்கிறார்.
முதல்-அமைச்சரை வரவேற்கும் விதமாக தென்காசி நகர் முழுவதும் தி.மு.க.வினர் கட்சிக்கொடிகள், அலங்கார தோரணங்கள் அமைத்துள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அரசு விழா நடைபெறும் மைதானத்தில் முதல்-அமைச்சரை வரவேற்கும் விதமாக போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.






