மக்களுக்கான நலத்திட்டங்களை காலம் தாழ்த்தாமல் விரைவாக வழங்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

மக்களுக்கான நலத்திட்டங்களை காலம் தாழ்த்தாமல் விரைவாக வழங்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை,
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (24.09.2025) மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மதுரை மாவட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள், அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழ்நாட்டினுடைய பண்பாட்டு கலாச்சார தலைநகரமாக உள்ள மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தை நடத்துவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். திமுக அரசு பொறுப்பேற்ற இந்த நான்கரை ஆண்டுகளில் அனைத்து தரப்பு மக்களும் பயனடைகின்ற வகையில், பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதுவும் குறிப்பாக, பெண்கள், மாணவர்கள், மாணவிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் என சமூகத்தில் பின்தங்கிய மக்கள் பொருளாதார சுதந்திரம் அடையவேண்டும். சமூக அந்தஸ்தை பெறவேண்டும் என்ற நோக்கத்தில் தான் நம்முடைய முதல்-அமைச்சர் பல்வேறு முற்போக்குத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.
மதுரை மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஏறுதழுவுதல் அரங்கம், கோரிப்பாளையம் ஆவின் மேம்பாலங்கள், பல்நோக்கு மருத்துவமனை, டைடல் பார்க், பல்வேறு குடிநீர் திட்டங்கள், விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒலிம்பிக் அகாடமி, விளையாட்டு வளாகத்தில் அமைக்கப்படுகின்ற நீச்சல் குளம், சிந்தடிக் ஹாக்கி டர்ப், புதிய விளையாட்டு விடுதி. இப்படி மதுரை மாவட்டத்திற்கென தனி கவனம் செலுத்தி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை தீட்டி வருகிறோம்.
இந்த திட்டங்களில் விடுபட்டவர்களும் பயனடையும் நோக்கில் உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களை நடத்தி வருகின்றோம். இந்த முகாம்கள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு நாம் ஏற்படுத்தி, அவர்களை எப்படியாவது முகாம்களுக்கு வரவழைத்து, காலம் தாழ்த்தாமல் அவர்களுக்கான நலத்திட்டங்களை விரைவாக வழங்குமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கின்றேன்.
கடைக்கோடியிலுள்ள எளிய மனிதர்களுக்கும் அரசினுடைய திட்டங்கள் விடுபடாமல் சென்று சேர்ந்து அவர்கள் பயனடைய வேண்டும் என்பதற்காகதான் இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படுகின்றன. எனவே அரசு அலுவலர்களும் நம்முடைய மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து குறிப்பிட்ட இடைவேளையில் மக்களை சந்தித்து களஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
மக்களுடைய அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படாமல் அவர்களுக்கு அரசின் மீது கூடுதல் நம்பிக்கை ஏற்படுத்துகின்ற வகையில் நம்முடைய செயல்பாடுகள் இருக்க வேண்டும். எனவே அடிப்படை தேவைகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
அரசு அலுவலர்களாகிய நீங்கள் இந்த அரசுக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக இருந்து, அரசினுடைய திட்டங்கள் அனைத்தும் தாமதமின்றி மக்களுக்கு சென்று சேர பணியாற்றி, இந்த அரசுக்கும் நம்முடைய முதல்-அமைச்சருக்கும் நல்ல பெயரை பெற்றுத் தருமாறு மீண்டும் உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.






