ஒகேனக்கல் 2-வது கூட்டு குடிநீர் திட்ட பணிகள் எப்போது தொடங்கும்? - அமைச்சர் கே.என்.நேரு பதில்

6 மாதத்திற்குள் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு முழுவதுமாக பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது தளி சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன், தேன்கனிக்கோட்டை பேரூராட்சியை சுற்றி வெளிவட்ட சாலை அமைக்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த முன்னூரிமை பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்ய அரசாணை வெளியிட உள்ளோம். இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஓகேனக்கல் 2-வது கூட்டு குடிநீர் திட்டத்திற்கு 8000 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுகிறது. இதற்கு ஜெய்கா நிதி உதவி பெற்ற உடன் டெண்டர் விட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை பொறுத்த வரையில் 2023-ம் ஆண்டு தான் 130 எம்.எல்.டி. கொடுக்க வேண்டும். ஆனால் தற்போதே 130 எம்.எல்.டி. தண்ணீர் கிடைத்து தண்ணீர் போதவில்லை. இன்னும் 6 மாதத்திற்குள் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு முழுவதுமாக பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும் என்று பதில் அளித்தார்.