திருப்பூரில் குளிர்கால ஆடை தயாரிப்பு அதிகரிப்பு

ஸ்வெட்டர்கள் தயாரிப்பில் திருப்பூர் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருப்பூர்,
திருப்பூரில் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுக்கு குளிர்கால ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் அதிக அளவில் கிடைத்துள்ளது. வங்கதேசத்துடன் இந்தியா வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டதன் விளைவாக இந்திய ஆடைகளை காட்டிலும், விலை குறைவுடன் வங்கதேச ஆடைகள் இந்தியாவுக்குள் அதிகம் இறக்குமதியானது.
இது உள்நாட்டு ஆடை வர்த்தகத்தை சிதைத்தது. உள்நாட்டு உற்பத்தியாளர்களின் தொடர் கோரிக்கையின் காரணமாக வங்கதேசத்தில் இருந்து தரைவழி ஆடை இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்ததால் கடந்த 2 ஆண்டுகளாக இந்தியாவில் உள்நாட்டு ஆடை வர்த்தகம் எழுச்சி பெற்றுள்ளது.
இதன்காரணமாகவே திருப்பூரில் உள்நாட்டு ஆடை வர்த்தகம் முந்தைய 2 ஆண்டுகளை விட கடந்த தீபாவளி பண்டிகைக்கு அதிகமாக நடந்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வர்த்தகர்கள் ஆர்டர்கள் கொடுத்து வாங்கி சென்றார்கள். தீபாவளி பண்டிகைக்கு பிறகு, குளிர்கால ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் திருப்பூரில் அதிகரித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை வரை இந்த ஆர்டர்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஸ்வெட்டர்கள் தயாரிப்பில் திருப்பூர் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கான ஆர்டர்கள் தொடர்ந்து அதிகம் கிடைத்து வருவதாக தெரிவித்துள்ளனர். மழை மற்றும் பனிக்காலத்துக்கு ஏற்ப அணியும் ஆடைகள் அதிகம் தயாரித்து அனுப்பி வைக்கப்படுகிறது. ஜனவரி மாதம் வரை இதுபோன்ற ஆடைகள் விற்பனை செய்யப்படும். அதன்பிறகு கோடைகாலத்துக்கான ஆர்டர்கள் வருகை தொடங்கும். கடந்த ஆண்டை காட்டிலும் 15 சதவீதம் ஆர்டர்கள் வருகை அதிகரிக்கும் என உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.






