நெருங்கும் பண்டிகை காலம்.. ரெயில்களில் கூடுதலாக முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்படுமா..?


நெருங்கும் பண்டிகை காலம்.. ரெயில்களில் கூடுதலாக முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்படுமா..?
x

ரெயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

சென்னை,

சென்னையில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் ரெயில் சேவைகளை பயன்படுத்தி தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று வருகின்றார்கள். குறிப்பாக சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் அதிகமானோர் ரெயில்களில் பயணம் செய்து சொந்த ஊர் செல்கின்றனர். ஆனால், ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்வது அவ்வளவு சாதாரண காரியமல்ல.

60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய முயன்றாலும் குறிப்பிட்ட சில ரெயில்களில் டிக்கெட் கிடைப்பது இல்லை. பின்னர், சிறப்பு ரெயில்களுக்காக காத்திருப்பார்கள். ஆனால், அதிலும் பலருக்கு இடம் கிடைப்பதில்லை. எனவே வேறு வழியில்லாமல் பண்டிகை காலங்களில் வழக்கமான ரெயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணம் செய்ய திட்டமிடுகின்றனர். ஏராளமானோர் இந்த பெட்டியில் பயணம் செய்வதால் கூட்டம் அலைமோதும்.

மின்சார ரெயில்களில் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்வதுபோல, முன்பதிவில்லாத பெட்டிகளில் தங்கள் ஊர் வரையில் ஆபத்தான முறையில் படிகட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.

முன்பதிவில்லாத பெட்டிகள்

இதனால் பயணிகளுக்கு இடையே வாக்குவாதம், டிக்கெட் பரிசோதகர் மற்றும் பயணிகள் இடையே வாக்குவாதம், பயணிகளின் பொருட்கள் திருட்டுப்போவது உள்பட பல்வேறு பிரச்சினைகள் எழுகிறது. இதையெல்லாம் கடந்து சிரமப்பட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு ஒவ்வொரு பண்டிகைக்கும் சென்று வருவதை பொதுமக்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். எனவே, பண்டிகை காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்தவும், சவுகரியமாக பயணம் மேற்கொள்ளவும் வழக்கமாக இயக்கப்படும் ரெயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து, ரெயில் பயணிகள் கூறுகையில், ‘பண்டிகை காலங்களில் வழக்கமான ரெயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில் எவ்வளவு பேர் பயணம் செய்ய முடியும்? என்பதற்கு ஏற்ற வகையில் டிக்கெட்டுகள் வழங்க வேண்டும். கூடுதல் டிக்கெட் வழங்குவதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, பண்டிகை காலங்களில் மட்டும் வழக்கமான ரெயில்களில் கூடுதல் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைத்து இயக்க வேண்டும்.

இதனால் பஸ்களில் கட்டணம் கொடுத்து சொந்த ஊர் செல்ல முடியாதவர்கள், படிக்கட்டுகளில் ஆபத்தாக தொங்கி செல்பவர்களுக்கு கூடுதல் பெட்டிகள் பயன் உள்ளதாக இருக்கும். ஏ.சி. பெட்டிகளை அதிகரிக்கும் ரெயில்வே நிர்வாகம், சாமானிய மக்களின் வசதிக்காக முன்பதிவில்லாத பெட்டிகளை அதிகரிக்கவும் முன்வர வேண்டும். அப்போதுதான், இன்னல்கள் இல்லாமல் சொந்த ஊர் சென்று பண்டிகைகளை சந்தோஷமாக கொண்டாட முடியும்.

வரும் நாட்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர் விடுமுறை வருவதால் வழக்கமான ரெயில்களில் கூடுதல் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம்' என்றார்கள்.

1 More update

Next Story