தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது - ஜி.கே.வாசன்


தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது - ஜி.கே.வாசன்
x

கோப்புப்படம்

தமிழக அரசு பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

கோவை விமான நிலையத்தின் பின்புறம் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை மூன்று இளைஞர்கள் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

தமிழகத்தில் கடந்த காலங்களில் இருந்து பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. தமிழக காவல்துறையின் சரியான கண்காணிப்பு இல்லாததே இதுபோன்ற குற்றங்களுக்கு காரணமாக அமைகிறது.

சிறுவயது முதல் பெரியோர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து வயது பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். இவற்றிற்கெல்லாம் மது, கஞ்சா, போதை பொருள்கள் ஆகியவை காரணமாக அமைகிறது. இளைஞர்கள் போதையின் பாதையில் செல்வதாலும் பல்வேறு குற்றங்கள் பெருகுவதற்கு வழி வகுக்கிறது.

மேலும் வலைதளங்களில் உள்ள ஆபாச செயலிகளுக்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும். இளைஞர்கள் முதல் பெரியோர்கள் வரை இதன் மூலம் தவறான வழிக்கு தள்ளப்படுவதும் காரணமாக அமைகிறது. ஆகவே மத்திய,மாநில அரசுகள் ஆபாச செயலிகளை தடைவிதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடராமல் இருக்க காவல்துறையின் தொடர் கண்காணிப்பும், சட்டங்கள் மூலம் கடுமையான தண்டனைகளும் இருந்தால் மட்டுமே இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story