விபத்தில் கைகளை இழந்த இளைஞர்: சிகிச்சையில் ஒரு கையை செயல்பட வைத்த பெண் மருத்துவர்கள் - உதயநிதி பாராட்டு


விபத்தில் கைகளை இழந்த இளைஞர்: சிகிச்சையில் ஒரு கையை செயல்பட வைத்த பெண் மருத்துவர்கள் - உதயநிதி பாராட்டு
x

ரெயில் விபத்தில் சிக்கி இடது கை தோள்பட்டைக்கு கீழே துண்டிக்கப்பட்டு தனியாகவும், வலது கை மணிக்கட்டு சிதைந்த நிலையிலும் இளைஞர் மீட்கப்பட்டார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

பீகார் மாநிலத்தை சேர்ந்த 28 வயதான தொழிலாளி ஒருவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 26.9.2025 அன்று சென்னை பூங்கா (park) ரெயில் நிலையம் அருகே, ரெயில் விபத்தில் சிக்கி இடது கை தோள்பட்டைக்கு கீழே துண்டிக்கப்பட்டு தனியாகவும், வலது கை மணிக்கட்டு முழுமையாக சிதைந்த நிலையிலும் கடுமையான காயங்களுடன் ரெயில்வே காவலர்களால் மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட நேயாளியை பார்வையிட்ட ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் பேராசிரியர் சாந்தாராமன் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொண்டதோடு, மருத்துவமனையின் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை குழுவினரை வரவழைத்து பாதிக்கப்பட்ட இளைஞரின் நல்வாழ்க்கைக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அதனடிப்படையில் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பேராசிரியர் மரு.பி.ராஜேஸ்வரி தலைமையிலான பெண் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் பாதிப்பட்ட நபரை பார்வையிட்டு இதுபோன்ற நிகழ்வுகளில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை குறித்தும், இந்த நோயாளிக்கு ஒரு கையையாவது பயன்படுத்தும் வகையில் அறுவை சிகிச்சை மேற்கொள்வது என்றும் கலந்தாலோசனை செய்து, மருத்துவமனையின் முதல்வர் மற்றும் மூத்த அறுவை சிகிச்சை வல்லுநர்களின் அறிவுரை பெற்று சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தனர்.

அதனடிப்படையில், பேராசிரியர் மரு. சாந்தாராமனின் மேற்பார்வையில், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை குழுவினரான பேராசிரியர் மரு.பி.ராஜேஸ்வரி, உதவி பேராசிரியர்கள் உ.ரஷீதா பேகம், மரு.வி.எஸ். வளர்மதி, மரு.வி.சுவேதா மற்றும் முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலும் மருத்துவர்களான மரு. ஷோனு, மரு. அன்னபூரணி, மரு. சி. சந்தோஷினி ஆகியோர் உடன் மயக்கவியல் மருத்துவர் ஜி. சண்முகப்ரியாவின் தலைமையிலான குழுவினர் இணைந்து இடது கையை, வலது மணிக்கட்டு பகுதியில் இணைக்கும் Cross hand replantation செய்ய முடிவு செய்தனர். இதன்மூலம் பாதிக்கப்பட்ட நபருக்கு குறைந்தது, ஒரு செயல்படும் கை மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டது.

இதற்காக பாதிக்கப்பட்ட நபரின் இடது கையை, வலது மணிக்கட்டு பகுதியில் இணைக்கும் வகையில், எலும்பு கட்டமைப்பு திருத்தம், தசை, நரம்பு மற்றும் ரத்த குழாய் இணைப்புகள் என மிக நுணுக்கமாக 10 மணி நேரம் நீண்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவக் குழுவினரின் அர்பணிப்பு உணர்வுடன் கூடிய நீண்ட அறுவை சிகிச்சையில் ரத்த குழாய் மறுசீரமைப்பு முடிந்த உடனே கையின் ரத்த ஓட்டம் தொடங்கி பொருத்தப்பட்ட கை வெற்றிகரமாக புத்துயிர் பெற்றது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு நோயாளிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) மருத்துவ கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இணைக்கப்பட்ட கையில் நல்ல இரத்த ஓட்டமும், முன்னேற்றமும் ஏற்பட்டது. அவரது வலது கையின் முழுமையான செயல்பாட்டை மீட்டெடுக்க, தீவிர இயன்முறை சிகிச்சை மற்றும் மனச்சிந்தனை மீள் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

Cross hand replantation என்பது உலகளவில் மிகவும் அபூர்வமான, சவாலான அறுவை சிகிச்சையாகும். இரு கைகளும் துண்டிக்கப்பட்ட இடங்களில் குறைந்தபட்சம், ஒரு கை இருப்பது, தினசரி செயல்களில் சுயமாக செயல்பட நோயாளிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

நோயாளி தமிழ்நாட்டைச் சேராதவர், அவரிடம் மருத்துவக் காப்பீட்டு அட்டை எதுவும் இல்லை, தெரிந்தவர்கள், உறவினர்கள் யாரும் உடன் வரவில்லை என்ற போதிலும், அவரது வாழ்வினை மீட்டெடுக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான அரசின் வழிகாட்டுதலின்படி மருத்துவ அலுவலர்கள், அரசு மருத்துவர்கள் இந்த சிறப்பு அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த பெருமைமிகு செயல், இந்தியாவின் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இத்தகைய அறுவை சிகிச்சை இந்தியாவிலேயே ஒரு அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்பட்டது மூலமாக அரசு மருத்துவமனையில் மறுசீரமைப்பு நுண்அறுவை சிகிச்சையான CROSS HAND REPLANTATION எனப்படும் குறுக்கு கைமீள் இணைப்பு அறுவைசிகிச்சை சாத்தியம் என்பதை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர் நிரூபித்துள்ளனர்.

மேலும், தமிழ்நாட்டின் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட குறுக்கு கைமீள் இணைப்பு மறுசீரமைப்பு நுண்அறுவை சிகிச்சையானது உலகளவில் பதிவு செய்யப்பட்ட நான்காவது, இந்தியாவில் இடம்பெறும் இரண்டாவது நிகழ்வாகும்.

இந்நிகழ்வில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மருத்துவமனையின் முதல்வர் பேராசிரியர் மரு. சாந்தாராமன் மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண் மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story