இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவத்தில் அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பரமார்த்தலிங்கபுரத்தை சேர்ந்தவர் மிக்கேல் சேவியர் (48 வயது), டெய்லர். இவர் தற்போது குடும்பத்துடன் பள்ளவிளை கங்காநகர் முதல் தெருவில் வசித்து வருகிறார். இவருடைய மகள் லிவினா (21 வயது), பி.எஸ்.சி. பட்டதாரி. இவர் பகுதி நேரமாக ஒரு அழகுநிலையத்தில் வேலை பார்த்து வந்தார். மேலும் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை தேடி வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் லிவினா மற்றும் அவரது சகோதரி ஷைனி ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்ற லிவினா நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் சகோதரி ஷைனி அறையின் கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சகோதரி அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது அறையில் லிவினா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சாவதற்கு முன்பு இளம்பெண், கடிதம் எழுதி வைத்திருக்கிறாரா? என வீடு முழுவதும் சோதனை செய்தனர். அப்போது கடிதம் ஏதும் சிக்கவில்லை. அதே சமயத்தில் லிவினா பயன்படுத்திய செல்போனை கைப்பற்றினர். ஆனால் செல்போனில் சிம்கார்டு இல்லாமல் இருந்தது. இதையடுத்து செல்போனை கைப்பற்றிய போலீசார், அதன் மூலம் ஏதாவது தகவல் கிடைக்கிறதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.
தற்கொலைக்கான காரணம் குறித்து லிவினாவின் தோழிகள், உறவினர்களிடமும் போலீஸ் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இதுகுறித்து லிவினாவின் தாயார் சோபா (46 வயது) போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே நேற்று லிவினாவின் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.






